உலகை கலக்கிய எகிப்து மக்கள் புரட்சி ஓராண்டு நிறைவு
எகிப்தில், அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான புரட்சியின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி, புகழ் பெற்ற தாரிர் சதுக்கத்தில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில் பலர், ராணுவ ஆட்சி உடனடியாக பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர்.
எகிப்தில் கடந்தாண்டு அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி, இதே ஜனவரி 25ம் தேதி மக்கள் புரட்சி துவங்கியது. அதற்கு முன் ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும், தாரிர் சதுக்கத்தில் ஜனவரி 25ம் தேதி முதல், மக்கள் ஆயிரக்கணக்கில் திரள ஆரம்பித்தனர். இந்தப் புரட்சி 18 நாட்கள் நீடித்தது. பிப்ரவரி 11ம் தேதி முபாரக், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டு, ஷரம் எல் ஷேக்கிற்கு ஓடிப் போனார்.
எகிப்தின் இந்த மக்கள் புரட்சி, அரபுலகத்தின் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் புரட்சித் தீயை மூட்டிவிட்டது. ஓராண்டு கடந்த பின்னரும் கூட, இன்றும் ஏமன், சிரியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் மக்கள் போராடிக் கொண்டு தான் உள்ளனர்.
இந்நிலையில், எகிப்து புரட்சியின் முதலாண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்தில் நேற்று முன்தினமே மக்கள், தாரிர் சதுக்கத்தில் திரள ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கானோர் கூடாரம் அடித்துத் தங்கினர்.
நேற்று காலையில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களால் அந்த சதுக்கம், தலைகளால் நிரம்பிய கடல் போன்று காட்சியளித்தது. தாரிர் சதுக்கத்தில் கூடிய மக்கள், எகிப்து புரட்சியைக் கொண்டாடிய போதும், ராணுவ ஆட்சியை எதிர்த்தும் கோஷமிட்டனர்.
புரட்சியின் முழு விளைவையும் மக்கள் அனுபவிக்க முடியாமல் போனதற்கு ராணுவ ஆட்சி தான் காரணம் என குற்றம் சாட்டினர். ராணுவ ஆட்சியை உடனடியாக பதவி இறக்காமல் இந்த புரட்சி ஓயப் போவதில்லை என, அங்கு வந்திருந்த ஒருவர் ஆவேசமுடன் தெரிவித்தார்.
எப்படியாயினும், ராணுவம் ஆட்சியில் இருந்து விலகப் போவது உறுதி. மாற்றம் மெதுவாகத் தான் நிகழும் என சிலர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், முதலாண்டு நிறைவை ஒட்டி, ராணுவ ஆட்சித் தலைவர் முகமது உசேன் டன்டாவி விடுத்த அறிக்கையில், 1967ம் ஆண்டில் இருந்து நாட்டில் அமலில் உள்ள அவசர நிலைச் சட்டம் நீக்கப்படுவதாகவும், அதே நேரம், கலவரத்தில் மக்கள் ஈடுபட்டால் அச்சட்டம் முன்னறிவிப்பின்றி அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment