ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல்
நக்கீரன் இதழில் வெளியான, முதல்வர் ஜெயலலிதா தொடர்பான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது. நக்கீரன் இதழின் நேற்று வெளியான பதிப்பில், முதல்வர் ஜெயலிதா குறித்து கட்டுரைச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலை 10:30 மணிக்கு, 100க்கும் மேற்பட்டவர்கள், ஜாம் பஜார், ஜானி ஜான்கான் ரோட்டில் உள்ள நக்கீரன் தலைமை அலுவலகத்தின் முன் கூடி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். அதில், அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்தன. காவலாளி சிவகுமார் உள்ளிட்ட இருவருக்கு காயம் ஏற்பட்டது. கல் வீச்சு நடந்து கொண்டிருந்த போது, அலுவலகத்தின் உள்ளே நக்கீரன் ஆசிரியர் கோபால், பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். தாக்குதல் நடத்தியவர்களில் சிலர், அலுவலகத்திற்குள் நுழைந்தும் தாக்கினர். நக்கீரன் அலுவலக ஊழியர்கள் அவர்களை விரட்டியதும், வெளியில் சென்று விட்டனர்.
தொடர்ந்து, அலுவலகத்தின் முன்பக்க கதவு இழுத்து மூடப்பட்டது. நக்கீரன் அலுவலகத்தில் இருந்து போலீஸ் கமிஷனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதால், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பாஸ்கரன், உதவிக் கமிஷனர் செந்தில்குமரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார், அனைவரையும் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து, பின் விடுவித்தனர். இதில், அசோக் எம்.எல்.ஏ., நக்கீரன் அலுவலகத்திற்கு வெளியில் பூட்டு போட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், உள்ளே இருந்த மற்ற பத்திரிகைகளின் நிருபர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.கல் வீச்சில், நக்கீரன் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமடைந்தன.
நக்கீரன் இதழில் வெளியான செய்தி குறித்து, அ.தி.மு.க., மாணவரணியினர், ஜாம் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தவிர, சென்னையில் அண்ணா சாலை, கமிஷனர் அலுவலகம் அருகில் என பல இடங்களிலும் அ.தி.மு.க.,வினர் கூடி, உருவ பொம்மை மற்றும் பத்திரிகை எரிப்பில் ஈடுபட்டனர்.அண்ணா சாலை, அண்ணா சிலை அருகில் எம்.எல்.ஏ., கலைராஜன் கைது செய்யப்பட்டார். மேலும், அ.தி.மு.க., வழக்கறிஞர் ஜானகி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர், நேற்று பிற்பகல் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.
ஆதரவு தாருங்கள்: நக்கீரன் கோபால் வேண்டுகோள்!இதுகுறித்து, நக்கீரன் ஆசிரியர் கோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:உயிருக்குப் பாதுகாப்போ, உத்தரவாதமோ இல்லாத நிலையில், மனத் துணிவை மட்டும் ஆயுதமாகவும், கவசமாகவும் கொண்டு நக்கீரன் குடும்பத்தினர் அனைவரும் அலுவலகத்தில் உள்ளோம்.இதழில் வெளியாகும் செய்தி தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வழி வகை உள்ளது. அதை எதிர்கொள்ளவும் நக்கீரன் தயாராக இருக்கிறது.இந்த நெருக்கடியான நிலையில், பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடக சகோதரர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை மிகுந்த அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகள் மற்றும் மனிதநேயர்கள் உள்ளிட்ட அனைவரின் தார்மீக ஆதரவை நாடுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நக்கீரன் செய்திக்கு பொன்னையன் மறுப்பு : ""நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலிதா மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்த இதழின் ஆசிரியர், வெளியீட்டாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., அமைப்புச் செயலர் பொன்னையன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:நக்கீரன் இதழில், ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பவர் என வெளியிடப்பட்டுள்ளது முற்றிலும் பொய்யான செய்தி. அவர் எப்போதும் மாட்டுக்கறி உண்பதில்லை.ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலராகக் கொண்டு வர, கட்சியினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொய்யான செய்தியை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொன்னையன் கூறியுள்ளார்.மாணவர் அணி: ஜெயலலிதா மீது அவதூறு செய்தியை வெளியிட்ட நக்கீரன் இதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., மாணவரணி கோரிக்கை விடுத்துள்ளது.
நக்கீரன் மீது தாக்குதல் கருணாநிதி கண்டனம் : "நக்கீரன்' அலுவலகம் தாக்கப்பட்டதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:ஒரு பத்திரிகையில், ஒரு முக்கிய பிரமுகரைப் பற்றி அவதூறாகவோ, அசிங்கமாகவோ, அருவருக்கத்தக்க வகையிலோ, அவமானத்துக்கு உள்ளாகும் வகையிலோ, எழுதினாலோ, செய்தி வெளியிட்டாலோ, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சட்டத்தில் வழிவகைகள் இருக்கின்றன.அதற்கு மாறாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், பதிலுக்குப் பதில் என்ற முறையில் வன்செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
குறிப்பாக, தற்போது, "நக்கீரன்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்காக, அந்த அலுவலகத்தில் நடந்துள்ள தாக்குதல், எத்தகைய வாதங்களை அல்லது நியாயங்களை வேண்டுமானாலும் எடுத்து வைக்கலாம்.ஆனாலும், பாதிக்கப்பட்டோர், சட்டப்படி நீதிமன்றங்களில், தங்களுக்குள்ள நியாயங்களை நிலை நிறுத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், பத்திரிகையாளர்களையோ அல்லது பத்திரிகை அலுவலகத்தையோ தாக்குவது, ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நன்றி தினமலர்
0 comments :
Post a Comment