ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஆதரவளிப்பதாக இஸ்ரேல் உறுதி.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவளிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பெங்களூரில் இஸ்ரேல் தனது துணைத் தூதரகத்தை திறக்க இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இஸ்ரேலில் இருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அவரை வரவேற்றுப் பேசிய இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இஸ்ரேல் ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரில் இஸ்ரேல் தனது துணைத் தூதரகத்தை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லிபெர்மென்,"இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் ரீதியிலான நட்புறவு, 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள இந்நேரத்தில், இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
இஸ்ரேல், ஏற்கனவே டில்லியில் தூதரகத்தையும், மும்பையில் துணைத் தூதரகத்தையும் வைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment