நீர்கொழும்பு கொட்டுவ மைதானம் அருகில் உள்ள (திறந்த மீன்விற்பனை சந்தையருகில் ) கடலோரப் பகுதியில் கருவாட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் கருவாட்டு தயாரிப்பதற்காக வெளியிடங்களிலிருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் அப்பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
நீர்கொழும்பு கடற்கரைத் தெரு மற்றும் குடாப்பாடு ஆகிய பிரதேசங்களில் சிறிய ரக மீன்பிடி படகுகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தி நின்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
தங்களிடம் மீன்களை கொள்வனவு செய்யாமல் (வாங்காமல்) வெளியிடங்களிலிருந்து மீன்களை கருவாட்டு தயாரிப்பதற்காக வாங்குவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து பொலிஸார் அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் குறிப்பிட்ட இடத்தில் நீதிமன்றங்கள் சில இருப்பதன் காரணமாக அமைதியை பேணுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.
இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர் ஆயினும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment