Saturday, January 7, 2012

நீர்கொழும்பு நகரில் டெங்கு காய்ச்சல் தீவிரம்

நீர்கொழும்பு நகரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது ஆண்கள் வார்டில் 28 பேரும் , பெண்கள் வார்டில் (Ward) 22 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தும் பிரிவின் பதிவுகளின்படி , கடந்த வருடம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 711 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர் .இவர்களில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 201 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அந்த 201 பேரில் 104 பேர் நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவுக்குட்பட்ட (MOH ) டெங்கு நோயாளிகளாவர்.

கடந்த டிசம்பர் மாதம் நீர்கொழுமபைச் சேர்ந்த 104 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் 10 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 125 ஆகும்.

நீர்கொழும்பு நகரின் தெஹிமல்வத்தை , உடையார் தோப்பு , லாஸரஸ் வீதி , வடக்கு பிட்டிபனை ,நெவெல்வத்த , தம்மிட்ட வீதி ,பிரதான வீதி , கடோல்கலே ,குரணை ஆகிய பிரதேசங்களில் அதிக எண்ண்க்கையானோர் டெங்கினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதே வேளை, கடந்த வாரம் நீர்கொழும்பில் ஆறரை வயதுடைய சிறுவன் ஒருவன் டெங்கினால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com