மெகசின் சிறைச்சாலையில் கலவரம், தீ மூட்டிய கைதிகள். கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகை.
மெகசின் சிறைச்சாலையில் கடமையிலிந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடுகள் முற்றியதில் சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பதட்டத்துடன் கூடிய கலவரம் வெடித்துள்ளது. இந்நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், ராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வதிவிட சிறைக்கைதிகளின் உணவு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, இன்று காலை சிறைச்சாலைக்குள் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக, சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர், சுயாதீனத் தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அங்கு ஏற்பட்ட பதட்ட நிலைமைகள் அடுத்து மெகசின் சிறைச்சாலையில் சமயலறை கட்டிடத் தொகுதிக்கும், ஏனைய பல இடங்களுக்கும் சிறைக்கைதிகள், தீ வைத்துள்ளனர். சிறைச்சாலை காவலாளிகள் மீது தாக்குதல் நடாத்தி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு, சிறைக்கைதிகள் முயற்சித்துள்ளனர். தீயை அணைப்பதற்கென, வருகை தந்த தீயணைக்கும் வண்டிகளுக்கும், தமது கடமைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு, சிறைக்கைதிகள் தடை ஏற்படுத்தியதாகவும், பொரளையிலிருந்து, தெமட்டகொட நோக்கி பயணம் செய்த வாகனங்களுக்கும், தெமட்டகொடையிலிருந்து பொரளை நோக்கி பயணித்த வாகனங்கள் மீதும் சிறைக்கைதிகள் தாக்குதல் நடாத்தி, சேதம் ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சில சிறைக்கைதிகள், சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையும், அவதானிக்க முடிந்தது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கென, பொலிஸாரும், ராணுவத்தினரும், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக, எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறைக்கைதிகளும், சிறைச்சாலை அதிகாரிகளும், சம்பவத்தில் காயமடைந்தனர் எனபதனை உறுதி செய்துள்ள புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க இந்நிலைமையை முற்று முழுதாக கட்டுப்படுத்துவதற்கென, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபபட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்.
பதற்ற நிலையை அடுத்து அங்குள்ள கைதிகள் சிலர் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு தற்போது மாற்றப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உள்ளிட்ட 45ற்கும் மேற்பட்டோரை ஏற்றிய சிறைச்சாலை பஸ் ஒன்று சற்று நேரத்திற்கு முன்னர் பாணந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏனைய கைதிகள் சிலரும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திக் கிடைத்த தகவலின்படி மெகசின் சிறைச்சாலையில் இருந்த 180 தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் அனைவரும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment