பிரான்ஸ் வீரர்களைக் கொன்ற ஆப்கான் படை வீரர்
ஆப்கானிஸ்தானில் ஆப்கான் ராணுவ வீரர் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ராணுவ வீரர்களை சுட்டதில் நான்கு பிரான்ஸ் வீரர்கள் பலியாகியுள்ளனர்.நேட்டோ படையில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் படையில் ஏறத்தாழ 4000 வீரர்கள் உள்ளனர். கபிசா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் (20.01.2012)நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் 15 வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்தச்சம்பவம் நேட்டோ படையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் சர்கோசி இதனை கடுமையாக கண்டித்துள்ளதோடு தனது படையினர் 2013 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள வெளியேறுதலுக்கு முன்பாக விரைவில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படுவர் என எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் ஜெரார்ட் லாங்குட் காபூல் விரைந்துள்ளார். சர்கோசியின் எச்சரித்தலுக்கு மாறாக தங்கள் படைகள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும் காலம் வரை தங்கியிருக்கும் என தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனும் ”லிஸ்பன் நகரில் செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக பிரான்ஸ் படைகள் வெளியேறும் என தாம் நம்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகள் விரைவில் வெளியேற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்கோசியை எதிர்த்து போட்டியிடும் பிரான்காய்ஸ் ஹொல்லாண்ட் ”தான் ஆட்சிக்கு வந்தால் படைகளை இந்த வருட இறுதியில் வெளியேற்றிவிடுவோமென” வாக்குறுதி அளித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ தகவலின் படி இதுவரை 82 பிரான்ஸ் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment