Thursday, January 19, 2012

மின்சார சபை ஊழியர்கள் “சட்டப்படி வேலை”

அரசாங்கம் போதியளவு சம்பள உயர்வினை வழங்கவில்லை எனத் தெரிவித்து மின்சார சபையின் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் “சட்டப்படி வேலை” தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாதவிடத்து கடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் ரஞ்ஜன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் பெற்றோலிய வளத் துறை ஊழியர்களுக்கு 18 வீத சம்பள உயர்வு வழங்குவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்த போதிலும், தொழிற்சங்கங்கள் அதற்கு இணங்கவில்லை. இனை அடுத்து இந்த ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 25 வீதத்தினால் உயர்த்துவதற்கு அரசாங்கம் நேற்று மாலை தீர்மானித்திருந்தது.

மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் பெற்றோலிய வளத் துறை ஊழியர்களின் சம்பள மீளாய்விற்காக நியமிக்கப்பட்ட அமைச்சு உப குழுவின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கு இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

ஆயினும், இந்த தீர்மானத்திற்கும் இணக்கம் தெரிவிக்க முடியாதென தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தமக்கு45 சதவீத சம்பள உயர்வு வழங்குமாறு வலியுறுத்தி அவர்கள் நேற்று நண்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, 45 சதவீத வேதன அதிகரிப்பை கோரி, மேல் மாகாண நீர்வடிகாலமைப்பு சபையின் பணியாளர்கள் நாளை முதல் நான்கு மணி நேர சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த தகவலை ஒன்றிணைந்த நீர்வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரையில் இந்த சேவைப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com