உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனைக்கான கால அவகாசம் நீடிப்பு
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி ஜனவரி 17ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் எட்டாம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தகவல்களை எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் 0114 354 729 எனும் தொலைநகல் இலக்கத்திற்கு வழங்குமாறும் மாணவர்களும் பெற்றோர்களும் கேட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சையில் பௌத்த நாகரீக பரீட்சைக்கு தோற்றிய ஐந்து மாணவர்களின் விடை தாள்கள் காணாமல் போயிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சை தாள் திருத்தும் நிலையமாக செயற்பட்ட எம்லிபிட்டிய மகா வித்தியாலயத்திலிருந்தே இந்த விடை தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment