Friday, January 20, 2012

தாமரைக் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

'தாமரைக் கோபுரம்' எனும் பெயரில் புதிதான நிர்மாணிக்கப்படவுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

104.3 மில்லியன் அமெரிக்க டொலரர் செலவில் இந்த தொலைத்தொடர்பு கோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. சுமார் 350 மீற்றர் உயரமாக இந்த தொலைத்தொடர்பு கோபுரமானது சீன தேசிய இலத்திரனியல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தானத்தினால் 30 மாத காலங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு பேரை வாவியின் அருகில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள 3.06 ஏக்கர் நிலத்தில் இந்த பாரிய கோபுரம் அமைக்கப்படவுள்ளது.

இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, ஏ.எச்.எம்.பௌசி, கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தாமரைக் கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில்: ஜனாதிபதியினதும் இந்த நாட்டு மக்களினதும் ஒரு பாரிய கனவு இன்று நனவாகின்றது. இக்கோபுரத்தை கம்பஹா மாவட்டத்தில் அமைக்கவே முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே கொழும்பில் இடம் ஒதுக்கப்பட்டது.

உலகின் ஏனைய நாடுகள் அடைந்துள்ள அபிவிருத்திக்கு இணையாக எமது நாடடையூம் முன்னேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதி இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com