Tuesday, January 17, 2012

இயற்கையைத்தவிர என்னை யாராலும் அசைக்க முடியாது! கருணாநிதி சொல்வீச்சு.

"" இயற்கையைத் தவிர, என்னை யாராலும் சாய்க்க முடியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர்., காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., படுதோல்விகளைச் சந்தித்துள்ளது.

பர்கூர் தொகுதியில், ஜெயலலிதாவும் தோல்வியடைந்துள்ளார். எனவே, அ.தி.மு.க.,வை யாராலும் சாய்க்க முடியாது என ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. என்னை, வேரோடு சாய்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இயற்கையைத் தவிர என்னை யாராலும் சாய்க்க முடியாது. தீயசக்தி என்று ஜெலலிதா என்னைக் குறிப்பிடுகிறார். அவருக்கு, ஈ.வெ.ரா., அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர்., ஆகியோர் என்னைப் பெருமைப்படுத்திக் கூறியவற்றை நினைவு கூறுகிறேன். எனவே, என்னைப் பற்றி ஜெயலலிதா கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

"என் குடும்பம், என் மனைவி, என் மக்கள்' என்று சுயநலமியாக நான் உள்ளேன் என, ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், "எனக்கு எல்லாமே என் உடற்பிறவா தோழிதான்' என, கூறிவிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு குடும்பம் நடத்திவிட்டு, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும் சுயநலமி, நான் அல்ல.

தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இரண்டு நாள்கள் காரில் சென்று ஆறுதல் கூறினேன். ஆனால், ஜெயலலிதாவைப் போல ஹெலிகாப்டரில் பயணம் செய்து, பத்தரை நிமிடத்தில் நிகழ்ச்சியை முடித்துத் திரும்பவில்லை.

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்துக்கு, 6,654 கோடி ரூபாய் ஒதுக்கி, அதில் முதல் கட்டமாக, 757 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார் என, புதிய அறிவிப்புகள் போல் செய்திகளை வெளியிடுகின்றனர். இத்திட்டம், தி.மு.க., ஆட்சியின் போதே, உலக வங்கி நிதியுதவியடன், 1,414 கோடி ரூபாயில் நகராட்சிகளின் அடிப்படை வசதித் திட்டங்கள் என, செயல்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, நிதி நிலை அறிக்கையில் தான் திட்டங்கள் அறிவிக்கப்படும். பின்னர், அதற்கு அரசு ஆணைகள் வெளியிடப்படும். இந்நிலையில், ஏற்கனவே, அறிவித்த திட்டங்களை, புதிய திட்டங்கள் போல கூறுகின்றனர். தி.மு.க., ஆட்சியில் குடிசைகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் அறிவித்து பணிகளும் தொடங்கப்பட்டன. இப்போது, அத்திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என அறிவித்து, 60 ஆயிரம் வீடுகள், இந்த நிதியாண்டி ல் கட்டப்படும் என கூறினர். ஆனால், ஏழு வீடுகளைத் தான் கட்டியுள்ளனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com