மீனவர் பிரச்சனை - கலாம் கருத்துடன் இலங்கை மீனவர்கள் அதிருப்தி.
இந்திய இலங்கை கடற்பரப்பில் இருநாடு மீனவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் தொடரும் நிலையில், கொழும்புக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வைத்துள்ள யோசனைகள் இருதரப்பிலும் மாற்றுக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.
இருநாட்டு மீனவர்களும் அடுத்த நாட்டு எல்லைக்குள் செல்லும் போது, அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினரால் பிரச்சினைகளை சந்திப்பதும், அதன் காரணமாக அரசியல் உரசல்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இந்திய இலங்கை கடற்பரப்பில் இரு மீனவர்களும் தலா மூன்று நாட்கள் மீன்பிடிக்கலாம் என்றும் ஒரு நாள் பொதுவாக ஓய்வு நாளாக இருக்கலாம் என்றும் அப்துல் கலாம் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். இக்கருத்தை இலங்கை ஜனாதிபதியுடன் தான் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் இதற்கு இருநாட்டு அரசின் முழுமையான ஆதரவும் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
அப்துல் கலாம் அவர்கள் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் இலங்கை மீனவர்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும், இது ஒரு நிரந்தர தீர்வாக அமையாது என்றும் கூறுகிறார் இலங்கையின் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாசன்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வை இலங்கை இழந்துள்ள வடபகுதி மீனவர்களை அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு மிக அருகிலிருக்கும் மன்னார் பகுதி மீனவர்களை இது மிகவும் பாதிக்கும் எனவும் ஜேசுதாசன் கூறுகிறார்.
இந்திய மீனவர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்டு இருப்பதால், உயர்திறன் படகுகளை பயன்படுத்துகிறார்கள் என்றும், அது இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறுகிறார்.
ஆனால் அப்துல் கலாம் அவர்களின் யோசனை வரவேற்கத்தக்கது என கூறுகிறார் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தேவதாஸ்.
ஆறு நாட்கள் கடலுக்கு சென்று ஆதாயம் இல்லாமல் இருப்பதைவிட, ஆளுக்கு மூன்று நாள் மீன்பிடிக்கச் செல்வது இருதரப்புக்கும் பயனளிக்கும் எனவும் அவர் கூறுகிறார்.
இந்திய மீனவர்கள் உயர்தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் தமக்கு பாதகம் ஏற்படும் என இலங்கை மீனவர்கள் கூறுவது தவறானது என்று கூறும் தேவதாஸ், இருதரப்பின் மீன்பிடிப்பும் வித்தியாசமானது என்றும் கூறுகிறார்.
அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டுள்ள யோசனைகள் குறித்து இந்திய இலங்கை இதுவரை கருத்துக்கள் ஏதும் வெளியாகவில்லை.
0 comments :
Post a Comment