Friday, January 6, 2012

ஆபத்தில் இந்திய விமானத்துறை?

இந்தியாவின் பயணிகள் விமானப்போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநர் பரத் பூஷன், இந்தியாவின் பல உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமைகள் கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த நிதி நெருக்கடியானது பயணிகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகவீனத்தை காரணம் காட்டி விமான ஓட்டிகள் விடுப்பு எடுப்பது ஒரு தொற்றுநோய் போல உள்ளது என்றும் அது விமான சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் பரத் பூஷன் கூறுகிறார்.

நிதிநிலை மோசமாக இருக்கும் விமான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய நியாயமான காரணங்கள் இருக்கின்றன எனவும் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால் நிதிநிலைமைகளை மட்டுமே கருத்தில் கொண்டு பயணிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று கூற முடியாது என்று கூறுகிறார். இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவையின் முன்னோடி என்று கருதப்படும் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்.

வெளிநாடுகளில் கூட இப்படியான நிதி நெருக்கடியில் பல விமான சேவை நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார். ஒரு விமானம் விபத்தை எதிர்கொண்டு விட்டதென்றால் அந்த நிறுவனமே திவாலாகிவிடும் எனும் நிலை இருக்கும் போது, பாதுகாப்பு விஷயங்களில் சமரசங்களை செய்யமாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.
அமெரிக்கா போன்ற நாட்டில் கூட 90 சதவீதமான விமான நிறுவனங்கள் திவாலாகும் நிலையில்தான் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

எனினும், உதிரிப்பாகங்கள் கூட வாங்கும் நிலையில் பல விமான நிறுவனங்கள் இல்லாத நிலையில், அவர்கள் விமானத்தை தரமாக வைத்திருந்து பாதுகாப்பாக இயக்குவார்கள் என்று கருத முடியாது என்கிறார் இந்திய விமானப் பயணிகள் சங்கத்தின் தலைவரான சுதாகர் ரெட்டி.
பல நிறுவனங்களில் விமான ஓட்டிகள் உட்பட பலருக்கு சரியான நேரத்துக்கு ஊதியங்களை கொடுக்க முடியாத சூழல் உள்ளபோது, அவர்கள் மருத்துவ விடுப்பு உட்பட பலவித காரணங்களால் விடுப்பில் செல்லும் போது எப்படி விமான சேவையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்புகிறார்.

Thanks BBC

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com