அதிபர் வேட்பாளர் தேர்வு: ஐயோவாவில் ராம்னி வெற்றி
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விட்டது. அமெரிக்காவில் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலங்களிலும் அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பு நடத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது. முதல் கட்டமாக ஐயோவா மாநிலத்தில் அமெரிக்க குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனர்.
அந்த வாக்கெடுப்பில் மசாசுசெட்ஸ் முன்னாள் ஆளுநரான 64 வயது மிட் ராம்னி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி உறுப்பினரான முன்னாள் செனட்டர் ரிக் சான்டோரம் 8 வாக்குகள் வித்தியாசத்தில் மிட் ராம்னியிடம் தோற்றார். மிட் ராம்னிக்கு ஆதரவாக 30,015 பேர் வாக்களித்தனர். ரிக் சான்டோரமிற்கு 30,007 வாக்குகள் கிடைத்தன. இவர்களுக்கு அடுத்த படியாக டெக்சாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான 76 வயது ரான் பால் அதிக வாக்குகளைப் பெற்றார்.
ஐயோவாவுக்கு அடுத்தபடியாக நியூ ஹேம்ஷயரில் அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நடைபெறும்.
ஜனவரி 10ம் தேதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் ராம்னி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து வரும் ஆறு மாதங்களில் அதிபர் தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு ஒவ்வொரு அமெரிக்க மாநிலங்களிலும் நடைபெறும்.
அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடவிருக்கும் பராக் ஒபாமாவிற்கு ராம்னி கடும் போட்டியாக இருப்பார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment