கறுப்பு ஜனவரி ஊடக போராட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில்
ஊடக அடக்குமுறைக்கு எதிரான கறுப்பு ஜனவரி ஊடக போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஜனவரி மாதத்திலேயே ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது அதிகளவான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், கறுப்பு ஜனவரி என பிரகடனம் செய்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்தாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையிலேயே ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.
ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மாத்திரம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியும் எனவும் ஜனாதிபதி மாளிகைக்கோ, ஜனாதிபதி அலுவலகத்திற்கோ வீதிப் போக்குவரத்து தடையை ஏற்படுத்தும் வகையில் பேரணி செல்ல முடியாது எனவும் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருந்தது.
ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்ப்பை ஆரம்பித்து ஜனாதிபதி மாளிகை அல்லது ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment