Monday, January 30, 2012

இடைநிலை பாடசாலை அபிவிருத்தியெனும் புதிய திட்டத்தால் ஆரம்ப பிரிவுக்கு பாதகமாம்

இடை நிலைப் பாடசாலைகளின் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் தேசிய செயற்றிட்டமானது தெளிவற்றதும் எதிர்கால நோக்கற்றதுமாக இருப்பதுடன், இது ஆரம்பப் பிரிவுகளை இல்லாது செய்யும் நடவடிக்கையாகவும் இருக்கின்றது. எனவே இத் திட்டத்தை உடனடியாக இடை நிறுத்த வேண்டும் என ஜே.வி.பி. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2012 முதல் 2016 ஆம் ஆண்டுகளுக்குள் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான வகுப்புக்களை இல்லாது செய்வதற்கு கட்டம் கட்டமாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாகவும், மேற்படி ஆரம்பப் பாடசாலைகளில் ஜனாதிபதியினதோ அமைச்சர்களினதோ பிள்ளைகள் பயிலவில்லையென்றும் அங்கு சாதாரண மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரது பிள்ளைகளே பயின்று வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்தப் புதிய செயற்றிட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்ட அவர், சுகாதாரத் துறையில் மக்கள் எந்தளவு நம்பிக்கை இழந்துள்ளனரோ அதே போன்று தற்போது கல்வித் துறையிலும் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment