Monday, January 16, 2012

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகள் கட்டில் இன்றி நிலத்தில்

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக ஆண்கள் வார்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளில் சிலர் கட்டில் இன்றி நிலத்தில் விரிப்புகள் விரித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வார்ட்டின் வெளி விறாந்தாவில் நிலத்தில் விரிப்பை விரித்து தங்கியிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இதன் காரணமாக அவர்கள் பெரும் அவஸ்தைக்கும் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர் .

இது தொடர்பாக வைத்தியசாலையின் பிரதி வைத்திய அதிகரி வைத்தியர் லால் அருணசிறி தெரிவிக்கையில், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணி வரை 86 நோயர்ளிகள் சிகிச்சை பெற்று வந்தனர் .இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிவரை இந்த எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 3 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களே அதிகளவில் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு , கட்டானை, திவுலுப்பிட்டிய , மினுவாங்கொட, சீதுவை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவுக்குட்பட்ட நோயாளிகளே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இன்றைய தினமும் இது தொடர்பாக வைத்தியசாலையின் நிர்வாகம் விசேட கூட்டம் ஒன்றை நடாத்தியது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட பிரிவொன்றை வைத்தியசாலையில் நிரந்தரமாக அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .இதற்கு தேவையான பௌதீக மற்றும் மனித வளங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

வைத்தியசாலையின் 3,ஆம், 4 ஆம், 8 ஆம் இலக்க வார்டுகளில் டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது . இட வசதியின்மையால் ஆணனள் பிரிவில் ஏனைய நோயாளிகள் உட்பட டெங்கு நோயாளிகளுக்கு கட்டில் வழங்க முடியவில்லை.

ஆயினும் எமது வைத்தியர்களும் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். நாங்கள் ஆளணி மற்றும் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலேயே பெரும் சிரமத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com