ஈரானைத் தாக்கினால்..... - ரஷ்யா எச்சரிக்கை!
"ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்" என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கும்போது, “மேற்கத்திய நாடுகள் டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார். "அதை விட்டுவிட்டு பயமுறுத்தல்களினாலோ தடைகளினாலோ நிலைமை மிகவும் மோசமாக ஆகிவிடும்" என அவர் கூறினார். "போர் தொடுப்போம் எனக் கூறுவது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மீது எண்ணெயை ஊற்றுவது போலாகும்" என தெரிவித்த லாவ்ரவ், "இவ்வாறு கூறுவதனால் ஏற்படும் பயங்கர விளைவுகள் எப்படி முடியும் எனக்குத் தெரியாது" என்று எச்சரித்தார்.
"ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்துவதற்கு தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்" என இஸ்ரேல் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் மேற்கு காஸாவில் நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் பைத் ஹானூன் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.
இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடத்தியதை அத்ஹாம் அபு செல்மியா என்ற அரசு அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ”தீவிரவாதிகள் பாதுகாப்பு வளையத்தின் அருகில் வெடிகுண்டை வெடிக்க முயலும்போது அதனைத் தடுப்பதற்காக ராணுவம் தாக்குதல் நடத்தியதாக” தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் அவர்கள் வைத்திருந்த வெடிகுண்டும் வெடித்துச் சிதறியது என குறிப்பிட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறான ஏறத்தாழ 30 சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்றதாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment