யாழ்.முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்
யாழ். மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அனைத்து முச்சக்கரவண்டிகளும் உடனடியாக பதிவு செய்யப்படவுள்ளதுடன், சாரதிகளுக்கான அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது. முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கான மாதாந்தப் பொதுக்கூட்டமும், நிர்வாகசபைத் தெரிவும் நேற்று (10.01.2012) செவ்வாய் கிழமை யாழ்.வேம்படி மகளீர் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள றிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் குற்றச்செயல்களின் மத்தியில் சில முச்சக்கரவண்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்செயல்களை குறைக்கும் பொருட்டே, குடாநாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பதிவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து முச்சக்கரவண்டிச் சாரதிகள் அனைவருக்கும் விசேட ஆள் அடையாள அட்டைகளை வழங்கவுள்ளதாகவும், இதன்மூலம் குற்றம் விளைவிப்பவர்களை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சில முச்சக்கரவண்டிச் சாரதிகள் நடந்துகொள்வதாகக் குறிப்பிட்ட சமன் சிகேரா, பொதுமக்களுக்கு பாதிப்புக்களை விளைவிக்காத வகையில் சாரதிகள் செயற்படுமிடத்து அவர்களுக்கு உதவிகளை வழங்கப் பொலிஸார் தயாராக இருக்கின்றனர் என்றார்.
0 comments :
Post a Comment