தாய்நாட்டில் இருந்தபடி பிரிட்டனில் உயர்கல்வி: ஒருங்கிணைந்த புதிய சேவை துவக்கம்
வெளிநாட்டு மாணவர்கள் அவரவர் நாடுகளில் இருந்தபடியே, பிரிட்டனில் கல்வி பயிலுவதற்கு வசதியாக பிரிட்டன் அரசு, புதிய சேவை ஒன்றை நேற்று அறிவித்துள்ளது. பிரிட்டனில் உயர் கல்வி கற்பதற்காக, உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு செல்கின்றனர்.
ஆனால், சமீப காலமாக கல்விக் கட்டணம் உயர்வு, படிப்பிற்கு பிறகு வேலை பார்த்து படிப்பிற்கான கட்டணப் பாக்கியைச் செலுத்துவதற்காக அளிக்கப்பட்ட விசா ரத்தாகும் நிலை, மாணவர் விசாவில் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தங்கள் தாய்நாட்டில் இருந்தபடியே பிரிட்டனில் படிப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில், உலகளவில் கல்விச் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியில் தனது இடத்தை தக்க வைப்பதற்காக, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் மற்றும் பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவியல் துறை இணையமைச்சர் டேவிட் வில்லெட்ஸ் இருவரும் நேற்று புதிய சேவை ஒன்றை துவக்கி வைத்தனர்.
"உயர்கல்விக்கான உலகளவிலான ஒருங்கிணைந்த ஆலோசனை சேவை' என்ற இத்திட்டத்தின்படி, பிரிட்டன் அரசு சார் நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயலாற்றும் நிறுவனங்கள் அளிக்கும் கல்விச் சேவைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவை ஒரே இணையதளத்தில் இனி கிடைக்கும்.
அந்த இணையதளத்தில், பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்கு வசதியாக அவற்றின் மின்னஞ்சல், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தொடர்பு முகவரிகள் அளிக்கப்பட்டிருக்கும். இவற்றின் மூலம் எந்த நாட்டைச் சேர்ந்த மாணவரும் மிக எளிதில், தேவையான பிரிட்டன் கல்வி நிறுவனத்தை விரைவில் தொடர்பு கொண்டு தனது படிப்பைத் தொடர முடியும்.
0 comments :
Post a Comment