Thursday, January 26, 2012

நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏன்? - விளக்குகின்றார் ஜனாதிபதியின் செயலாளர் வீரதுங்கா

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும்படி சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவுடன் 'லக்பிமநியூஸ்' நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அந்நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தாவது,

சில ஆண்டுகளிற்கு முன்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சிறிலங்கா அதிபர் ராஜபக்ச சந்தித்த போது பேசப்பட்ட விடயங்களே 13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பாலானதாகும் என வீரதுங்க தெரிவித்தார். 13 ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் உருவாக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார். அதாவது 13 ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பாலான உடன்பாடானது, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றிராத மாகாண மட்ட பிரதிநிதிகளுக்கு மத்திய கட்டமைப்பில் பிரதிநிதித்துவத்தை வழங்குவதை உள்ளடக்கியுள்ளது.

"இக்கட்டமைப்பில் தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு நியாயமான அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்" என வீரதுங்க விளக்கினார். "இது மத்திய அரசாங்கத்தில் மாகாண மட்ட நலன்களிற்கு இடமளிப்பதற்கு உதவுவதாக அமைந்திருக்கும். இது தொடர்பான சட்டங்களை வரைவதற்கு நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு என்பன இதனை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. நாடாளுமன்றமானது உண்மையான பிரதிநிதித்துவத்தை வழங்கமுடியாததாக இருக்கலாம் என்பதால் இது முக்கியமானதொன்றாக உள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.

வீரதுங்கவிடம் நாடாளுமன்ற தெரிவுக் குழு தொடர்பாக வினவியபோது, நிலையான அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு நகர்த்த முடியும் என்பது தொடர்பாகவும் ஆராய்வதற்காகவே இத்தெரிவுக் குழு உருவாக்கப்படுவதற்கான காரணம் என அவர் பதிலளித்தார்.

"இவ்வளவு காலமும் உருவாக்கப்பட்ட அனைத்துக் குழுக்களும் நாடாளுமன்றிற்கு வெளியிலேயே உருவாக்கப்பட்டன. இதில் APRC யும் உள்ளடங்குகின்றது" எனவும் வீரதுங்க விளக்கினார். "இதனால் இனப்பிரச்சினை விடயத்தை நாடாளுமன்றிற்குக் கொண்டுவர முடியாது. ஏனெனில் நாடாளுமன்றம் அதனை ஏற்றுக் கொள்ளாமையே அதற்கான காரணமாகும். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக வாதங்களை மேற்கொண்டால், நாடு அதற்கான தீர்வைத் தெரிவு செய்துகொள்ள முடியும். அதனால் இத்தீர்வை மறுக்க முடியாது. ஆகவே இத்தெரிவுக் குழுவானது நாடாளுமன்றிற்குள்ளேயே உருவாக்கப்படவேண்டும்" எனவும் வீரதுங்க தெளிவுபடுத்தினார்.

"நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்குமாறு நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டுக்கொண்டோம், ஆனால் அவர்கள் இதனை மறுத்துவிட்டார்கள், இது விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நடக்க அவர்கள் இணங்கவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

"இது கோழிக்குஞ்சு – முட்டை போன்ற ஒருவகை நிலைப்பாடாகும். நாடாளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இத்தெரிவுக் குழுவில் உள்ளடங்கியிருப்பர். இது நாடாளுமன்றிற்குள் மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். நாடாளுமன்றத் தெரிவுக் குழு விடயத்தில் என்ன நடந்தாலும் அந்த விடயத்தில் தான் முழு ஆதரவையும் வழங்குவதாக சந்திப்பொன்றில் சிறிலங்கா அதிபர், சம்பந்தனிடம் தெளிவாக உறுதியளித்திருந்தார்" எனவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கமானது APRC ஊடாகப் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்ததாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. "APRC யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்" என வீரதுங்க தெரிவித்தார்.

"நாடானது தீவிரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த போது நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டி வரும் என எவருமே கற்பனை செய்துபார்த்திருக்க மாட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இதனை நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கட்சி ஆகும்" எனவும் அதிபரின் செயலர் வீரதுங்க குறிப்பிட்டார்.

"13 ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பாலான உடன்பாடானது எமது கழுத்தை அறுக்கும் செயலாகும். இது மிக அவசர அவசரமாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது. சிறிலங்காவில் அல்ல. இது எம்மைத் திருப்திப்படுத்தாவிட்டாலும் கூட இதனை நாம் ஏற்றுக்கொண்டோம்" எனவும் வீரதுங்க தெரிவித்தார்.

மாகாணமட்ட காவற்துறை அதிகாரங்களை மாகாண முதலமைச்சரின் கைகளில் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது. சிறிலங்கா காவற்துறையின் மாகாண பொறுப்பு அதிகாரியை முதலமைச்சர் நியமிக்கவேண்டும் என கூட்டமைப்பு விரும்புகின்றது.

"இது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். நாங்கள் இப்பிரச்சினை தொடர்பாக மிக, மிகத் தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார். இது நியாயமானதா? இக் கோரிக்கையை அமைச்சர் தொண்டமான் மிகப் பலமாக எதிர்த்தார். சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய மாகாணத்தில் எப்போதும் சிங்களவர் ஒருவரே முதலமைச்சராக இருப்பார் எனவும் இங்கு தமிழர் ஒருவர் ஒருபோதும் முதலமைச்சராக இருக்க முடியாது என்பதால் "எமது மக்கள் மீது காhவற்துறை அதிகாரங்களைப் பிரயோகிக்கின்ற தெரிவைக் கொண்ட முதலமைச்சர் எமக்கு ஒருபோதும் வேண்டாம், நாங்கள் மத்திய அரசாங்கத்திடமே முறைப்பாடு செய்ய முடியும்" எனவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

"மாகாணங்களில் காவற்துறையினரின் எண்ணிக்கைகளை அதிகரிக்க முடியும். முதலமைச்சருக்கு இது தொடர்பில் அதிகாரங்களையும் வழங்க முடியும். ஆனால் முற்றுமுழுதாக அல்ல" எனவும் வீரதுங்க வலியுறித்தியுள்ளார். "மாகாண மட்ட காவற்துறை பொறுப்பதிகாரியை நியமிக்கின்ற அனுமதி நிச்சயம் வழங்கப்படக் கூடாது. மாகாண மட்டத்தில் குறிப்பிடத்தக்க சில கண்காணிப்பு அதிகாரத்துடன் மத்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே காவற்துறை தொடர்ந்தும் இருக்க வேண்டும்" எனவும் அவர் விளக்கினார்.

இதேவேளையில், காணி என்பது முக்கிய பிரச்சினையாகும் என வீரதுங்க தெரிவித்துள்ளார். 65,000 சதுரகிலோமீற்றரைக் கொண்ட ஒரு சிறிய நாடே சிறிலங்காவாகும். "இங்கு ஒன்பது மாகாணப் பிரிவுகள் உள்ளன. உள்ளுர் அரசியல்வாதிகள் தமக்கு விரும்பியபடி இக்காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் நாட்டின் முக்கிய வளமானது அழிவடைந்துவிடும்" எனவும் அவர் தெரிவித்தார்.

"தற்போது மாகாண மட்ட காணி ஆணையாளர் சில அதிகாரங்களைக் கொண்டுள்ளார். ஆனால் சிறிலங்கா அதிபரே இறுதியாக காணி உறுதிகளை வழங்குவதற்கான உரிமையைக் கொண்டுள்ளார். காணி உறுதிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு முன்னர் 39 படிமுறைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இது கெட்ட விடயமல்ல. ஏனெனில் காணி என்பது அருமையான, கிடைத்தற்கரிய சொத்தாகும்." எனவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

"ஆகவே காணி, காவற்துறை அதிகாரப் பகிர்வு விடயங்கள் விவாதிக்கப்பட வேண்டியவையாக உள்ளன எனவும், இது தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக் குழு விவாதித்து உடன்பாடொன்றை எட்டவேண்டியுள்ளதாகவும், இத்தெரிவுக்குழுவானது மிக முக்கியமான கருவியாக உள்ளதாகவே நான் கருதுகிறேன்" எனவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மொழியாக்கம்: நித்தியபாரதி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com