Wednesday, January 18, 2012

சம்பந்தப் பெருமானும் சரவணப் பொய்யரும்! -மொழிவரதன்

"தமிழ் சிவில் சமூகம்" என்ற பெயரில் சிலர் ஒன்றுசேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பிய புலிகளின் பாணியிலான கடிதத்திற்கு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அவருடைய கடிதத்தில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை வைத்துப் பார்க்கையில், அக்கடிதத்தின் நம்பகத் தன்மையே
கேள்விக்குறியாகின்றது.

சம்பந்தனின் பதில் கடிதப்படி, அந்த மகஜரில் ஏராளமானோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தும், அவர்கள் எவரினதும் கையெழுத்துகள் அதில் இருக்கவில்லை. அடுத்த விடயம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில் பெரும்பாலோர் மக்களுக்குத் துளியும் பரிச்சயமில்லாத அநாமதேயங்கள். அதிலும்கூட பலர் தங்களுக்கும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனக் கூறியதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

அப்படியானால் இது ஒரு மோசடிக் கடிதமா? இந்தக் கூறப்படும் கடிதத்தில் முதலாவது பெயராக மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப்பு அவர்களின் பெயர் உள்ளது. அப்படியானால் அவரும் இந்த அநாமதேயக் கடிதத்தில் சம்பந்தப்பட்டுள்ளாரா? ஏற்கெனவே அவர் புலிகளின் காலத்தில் எடுத்த நிலைப்பாடுகள், விடுத்த அறிக்கைகள் காரணமாக, 'வெள்ளை அங்கி தரித்த புலி' என சில தரப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்தக் கடிதம் அவரை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்
இடையில் நடைபெற்றுவரும் இனப்பிரச்சினை சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை எப்படியும்
குழப்பிவிட வேண்டும் என்பதில், கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் (சிறீதரன்,
அரியநேத்திரன், சரவணபவன் முக்கியமானவர்கள்) உட்பட சில சக்திகள் பகீரதப்
பிரயத்தனம் செய்து வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இல்லாத பொல்லாத பொய்ச்
செய்திகளையெல்லாம் இட்டுக்கட்டி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'உதயன்'
பத்திரிகை களமமைத்துக் கொடுத்து வருகின்றது.

இதன் மூலம் அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அரச எதிர்ப்பு நிலையில் வைத்திருந்து, அவர்களுக்குஎதுவுமே கிடைக்காமல் பார்த்துக் கொள்வதுதான் உதயனின் நோக்கம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.சரவணபவனுக்கு சொந்தமான உதயன் பத்திரிகை இத்தகைய விசமத்தனங்களில் ஈடுபட்டாலும், கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் சிவில் சமூகத்தின் கடிதத்துக்கு அனுப்பி வைத்துள்ள பதிலில்
இவ்வாறு கூறியிருக்கிறார்: 'அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இடம்பெறும் எல்லா விடயங்களையும் பொதுமக்களிற்கு வெளியிடுவது சாத்தியமற்றதாகும். எனினும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நடைமுறைச் சாத்தியமானதும் நிலையானதும் பெரும்பான்மையான எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதுமான அரசியல் தீர்வை நோக்கியதாக எமது பேச்சுவார்த்தை கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகிறேன்'

சம்பந்தனின் இந்தக் கூற்று சொல்வது என்ன? சரவணபவனின் உதயன் பத்திரிகை சொல்வதற்கு மாறாக, அரசுடனான பேச்சுவார்த்தை ஆரோக்கியமான திசை வழியில் பயணிக்கிறது என்பதையல்லவா? அப்படியானால் சரவணபவன் தலைவர் சம்பந்தனின் கூற்றுக்கு எதிராக விசமத்தனம் செய்வதும், அவர் மீது கூட்டமைப்பு நடவடிக்கை ஏதும் எடுக்காதிருப்பதும் ஏன்?

இதுமட்டுமல்ல, கூட்டமைப்பின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன்
அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நட்பின் நிமித்தம் கிரிக்கெட் விளையாடியது பற்றி
வாசகர்களிடம் அபிப்பிராயம் கேட்பது என்ற போர்வையில், சுமந்திரனுக்கு எதிரான கருத்தை
உதயன் உருவாக்கி வருகிறது. சரவணபவனின் இந்த கபடத்தனமான, கட்டுப்பாடற்ற போக்கை, கூட்டமைப்புத் தலைமை தடுத்து நிறுத்த வக்கற்றுப் போய்விட்டதா என்ற கேள்வியும், அதன் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு பத்திரிகை என்ற சர்வ வல்லமையுள்ள ஊடக ஆயுதத்தை வைத்துக் கொண்டு, சரவணபவன் தமிழ் கூட்டமைப்பையே தனது கைக்குள் போட எடுக்கும் முயற்சியை, அதன் தலைமை எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்கப் போகிறதோ தெரியவில்லை.

No comments:

Post a Comment