யாழ் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.
2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. காவலூர் ஜெகநாதன் அறக்கட்டளை நிலையமும் யாழ் படைத் தலைமையகத்தின் சிவில் பிரிவும் இணைந்து இந்நிகழ்வை கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடாத்தினர்.
இப்பாராட்டு விழாவில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க கலந்துசிறப்பித்தார்.
கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரி மாணவன் கே.கமலவாசன், விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஏ.சஞ்சயன், வர்த்தகப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கே.நிரூபிகா, கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவி எஸ்.சத்யா ஆகியோருக்கான பாராட்டுப் பரிசில்களை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த கத்துருசிங்க வழங்கிக் கௌரவித்தார்.
மாவட்ட ரீதியாக இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பரிசில்களை டான் தொலைக்காட்சி பணிப்பாளர் எஸ்.எஸ்.குகநாதன், மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகமார் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.
கணிதப் பிரிவில் உடுப்பிட்டி அமெரிக்கமிசன் கல்லூரி மாணவன் கே.தனிரோஜன், விஞ்ஞானப் பிரிவில் மெதடிஸ்த மிசன் பெண்கள் உயர்; பாடசாலை மாணவி எஸ்.யோகினி, வர்த்தகப் பிரிவில் வடமராட்சி இந்து மகளீர் கல்லூரி மாணவி எஸ்.கோகிலா, கலைப் பிரிவில் வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவன் கே.சஞ்சீவன் ஆகியோர் பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.
கணிதப் பிரிவில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மாணவன் கே.பிரதீப், விஞ்ஞானப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி என்.வாகினி, வர்த்தகப் பிரிவில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மாணவி ஏ.சிவாஜினி, கலைப் பிரிவில் சிதம்பராக் கல்லூரி மாணவி ஜே.மாதங்கி ஆகியோருக்கான பரிசில்களை வடமாகாண கல்விப் பணிப்பாளர் பி.விக்னேஸ்வரன் வழங்கிக் கௌரவித்தார்.
அத்துடன் இவர்களில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை காவலூர் ஜெகநாதன் அறக்கட்டளை நிதியத்திலிருந்து மாணவர்களுக்கு வைப்பில் இடப்பட்ட வங்கிப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்நிதியானது இம்மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்திசெய்யும் வரை வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கான வங்கிப் புத்தகங்களை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த கத்துருசிங்க மற்றும் அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும், டான் தொலைக்காட்சிப் பணிப்பாளர் எஸ்.எஸ்.குகநாதன் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் க.கணபதிப்பிள்ளை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பீடாதிபதி எஸ்,யோகநாதன், கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் அ.அகிலதாஸ், நெல்லியடி மத்திய மகா வித்திhயலய அதிபர், வட இந்து மகளீர் கல்லூரி அதிபர், சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர், மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
0 comments :
Post a Comment