ஊழல் புகாரிலிருந்து தப்பிக்க ருத்ர ஜெபம்? எஸ்.எம்.கிருஷ்ணா நெரூர் பயணம் ரத்து
இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், எஸ்.எம்.கிருஷ்ணா திடீரென டில்லி புறப்பட்டுச் சென்றதால், அவரது கரூர் பயணம் ரத்தானது. தன் மீது சுமத்தப்பட்ட, சுரங்க ஊழல் முறைகேடு புகாரைத் தகர்த்தெரிய, நெரூர் சதாசிவம் ப்ரம்மேந்திராள் கோவிலில், ருத்ர ஜெபம் நடத்த, அவர் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், எஸ்.எம்.கிருஷ்ணா, 1999-2003ம் ஆண்டில், கர்நாடக முதல்வராக இருந்தபோது, "பிளாக் லிஸ்டில்' இருந்த பல சுரங்க நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக, கர்நாடக "லோக் ஆயுக்தா' போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் மத்திய அமைச்சர் கிருஷ்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
இதற்கிடையே, கரூர் அடுத்த நெரூரில், காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோவிலில் உள்ள சதாசிவம் ப்ரம்மேந்திராள் அதிஷ்டானத்தில், மத்திய அமைச்சர் கிருஷ்ணா, "ருத்ர ஜெபம்' நடத்துவதாக இருந்தது. ஆனால், திடீரென அவர், டில்லி புறப்பட்டுச் செல்ல நேர்ந்ததால், கிருஷ்ணா நேற்று வரவில்லை.அவருக்கு பதிலாக, அவரது உதவியாளர்கள் மஞ்சு, பிரகாஷ் ஆகியோர், ருத்ர ஜெபத்தில் பங்கேற்றனர். கர்நாடக மாநிலத்திலிருந்து பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. காசி விஸ்வநாதர் மூலவருக்கு பின்புறம் அமைந்துள்ள சதாசிவம் ப்ரம்மேந்திராள் ஜீவசமாதியில், இந்த பூஜை நடந்தது. மஞ்சு மற்றும் பிரகாஷ் இருவரும், பூஜை முடிந்ததும், பெங்களூரு விரைந்தனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், கிருஷ்ணா வருகை முன்னிட்டு, கரூர் ஆயுதப்படை மைதானத்திலிருந்து நெரூர் வரை, 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அமைச்சர் வராததால், பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார், சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர்.அபசகுனம்: பூஜைகள் முடிந்து, அர்ச்சகர் நாராயணன், பூஜை மணி அடிக்கும்போது, மணியின் உள்பகுதியில் உள்ள, நாக்கு கழன்று விழுந்தது. உடனே, அந்த மணி மீது இருந்த நந்தி சிலைக்கு, சந்தனம் வைத்து, அதை ஓரம் கட்டினார். நாக்கு விழுந்தது, அபசகுணமாகக் கருதப்படுகிறது.
ருத்ர ஜெபத்தால் என்ன பயன்?இங்கு ருத்ர ஜெபம் செய்தால், நினைத்த காரியம் நடக்கும்; தடைகள் நீங்கும்; எதிரிகள் அடங்கிச் செல்வர்; தேக ஆரோக்கியம் ஏற்படும்; பதவி நிலைக்கும்; வழக்குகளிலிருந்து தப்பிக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு இதற்கு முன், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அ.தி.மு.க.,விலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சசிகலா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட, ஏராளமான வி.ஐ.பி.,கள் வந்து சென்றுள்ளனர்.
நன்றி தினமணி
0 comments :
Post a Comment