விமர்சித்தால் தண்ணியும், மின்சாரமும் கிடையாது. இந்தியாவில் ஊடக சுதந்திரம்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதை கண்டித்து அ.தி. மு.க.வினர் நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் தனது அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நக்கீரன் தரப்பில் ஆஜர் ஆன வக்கீல் பி.டி. பெருமாள், நக்கீரன் அலுவலகத்துக்கு குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு இன்று விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம், ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நக்கீரன் அலுவலகத்துக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. தொழில் நுட்ப கோளாறு காரணமாக அந்த பகுதியில் மின் இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. கோளாறு சரி செய்யப்பட்ட பின் இணைப்பு கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுதாரர் வக்கீல் பி.டி. பெருமாள் கூறுகையில் இந்த நிமிடம் வரை நக்கீரன் அலுவலகத்துக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்றார். அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் அதை மறுத்தார். மனு தாரரின் பத்திரிகை முதல்வரைப் பற்றி தவறாக செய்தி வெளியிட்டு தமிழக மக்களின் மனதை புண்படுத்தி விட்டது. என்றாலும் இந்த அரசுக்கு யாரையும் பழி வாங்கும் நோக்கமோ, அவசியமோ இல்லை.
நக்கீரன் அலுவலகத்துக்கு மின் இணைப்பு உள்ளது என்றார். இந்த வாதத்தை மறுத்த மனுதாரர் வக்கீல், இந்த நிமிடம் வரை பிரிண்டிங், மற்றும் பைண்டிங் பகுதிக்கான மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் தொழில் நுட்ப கோளாறு காரணமாகத்தான் மின்சாரம் தடைபட்டுள்ளது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு மின்சாரம் வரும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்கு முன்னதாக மனுதாரர் அலுவலகத்துக்கு விரைவில் அரசு மின் இணைப்பை கொடுக்கும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment