இலங்கையின் தொடர்பு சாதன துறையை புதிய யுகத்திற்கு இட்டுச்செல்லும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள தாமரை கோபுரத்திற்கான உடன்படிக்கை, நேற்று முற்பகல் தொலை தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான லலித் வீரதுங்க முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட மற்றும் நிர்மாண பணிகளை பொறுப்பேற்றுள்ள 2 சீன கம்பனிகளின் தலைவர்களான சென் எக்யூ மற்றும் கியூ செப்பின் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.
350 மீட்டர் உயரத்தினை கொண்ட பல் செயற்பாட்டு கோபுரம், கொழும்பு, டி.ஆர். விஜயவர்தன மாவத்தையில், 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 50 தொலைக்காட்சி சேவைகள், 50 வானொலி சேவைகள், 10 தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கு தொடர்புசாதன வசதிகள், தாமரை கோபுரத்தினூடாக, ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன.
கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் சுற்றுலா வர்த்தகத்துறையின் மேம்பாட்டுக்கும், தாமரை கோபுரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக, அமையவுள்ளது. தாமரை மலர் வடிவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கோபுரத்தில் நூதனசாலை, உணவு விடுதி, நிர்வாக அலுவலகம், கண்காட்சி கூடம் என்பன ஏற்படுத்தப்படவுள்ளன.
இங்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான லலித் வீரதுங்க இந்த கோபுரம் நிர்மாணிக்கப்படுவது தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட பாரிய புரட்சியாகும். எதிர்வரும் 20 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்குள் நிர்மாணப்பணிகளை பூரத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment