Wednesday, January 18, 2012

திபெத்தியர்கள் மீது சீன ராணுவம் துப்பாக்கிச் சூடு: ஆஸி., வெளியுறவு அமைச்சர் ரூத் கண்டனம்.

திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, தீக்குளிக்கும் புத்த மதத் துறவிகளின் எண்ணிக்கை, 16ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், திபெத்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து, ஆஸ்திரேலியா கண்டனம் தெரிவித்துள்ளது.

திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து, கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை, 16 புத்த மதத் துறவிகள் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்த அனைத்து தீக்குளிப்புகளும், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தான் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அம்மாகாணத்தின், டாரி என்ற பகுதியில் தீக்குளித்து இறந்த, 16வது புத்த மதத் துறவியின் உடலைத் திரும்பப் பெறும் நிகழ்ச்சிக்காக, நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, சீன ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இச்சம்பவத்தைக் கண்டித்தும், வரவிருக்கும் புத்தாண்டை ஒட்டி, சீன அரசின் கவனத்தைக் கவர்வதற்காகவும், சிச்சுவான் மாகாணத்தின், செடா பகுதியில் புத்த மதத் துறவிகளும், திபெத்தியர்களும், தலாய் லாமாவின் படத்தோடு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திபெத்தியர்கள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, தலாய் லாமாவின் படத்தை வைத்திருக்கக் கூடாது என்று, சீன அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மிக தைரியமாக திபெத்தியர்கள், அவரது படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டது, சீன அரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள திபெத் கவுன்சில் என்ற அமைப்பு, திபெத்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக, பிரதமர் ஜூலியா கில்லார்டு, சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, ஆஸி., வெளியுறவு அமைச்சர் கெவின் ரூத்தின் செய்தித் தொடர்பாளர், நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திபெத்தியர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, ரூத் மிகவும் கவலை அடைந்துள்ளார். சீனச் சிறுபான்மையினரின் மொழி, பண்பாடு மற்றும் மத அடையாளங்களை காப்பதற்கு, பொருளாதார வளர்ச்சி தான் மிகச் சிறந்த கருவி என்பதை, சீனா உணர வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment