Tuesday, January 31, 2012

யாழ்.மாவட்டத்தில் தீவிரமடைகிறது டெங்கு- தை மாதத்தில் மட்டும் 91 நோயாளர்கள்

யாழ் மாவட்டம் முழுதிலும் தை மாதத்தில் மட்டும் 91 டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு நோயாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏழாலை பகுதியிலும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் நீர்வேலி பகுதியிலும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மல்லாகம் பகுதியிலும் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக வெட்டப்பட்ட வாழைக்குற்றிகள், கிளுவை மரப் பொந்துகள், வாழைப் பூவிலிருந்து உதிரும் மடல்கள் போன்றவற்றில் தேங்குகின்ற நீரிலிருந்து நுளம்புகள் பெருக்கமடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர யாழ் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் டெங்கு நோய்த் தாக்கம் பரவலாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருக்கமடையாது தினந்தோறும் கண்காணிப்பதன் மூலமும், காய்ச்சல் நோயாளர்கள் உடனடியாகவே தகுதியான வைத்திய ஆலோசனை பெறுவதன் மூலமும் டெங்கு நோயினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளிலிருந்த தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment