மகசீன் சிறைச்சாலை கலவரத்தினால் 75 இலட்சத்துக்கும் அதிகமான சொத்துக்களுக்கு சேதம்
ஆவனங்கள் அனைத்தும் தீயுடன் சங்கம்.
மகசீன் சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையால் 75 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மகசீன் சிறைச்சாலையின் ஆவணக் களஞ்சியசாலைக்கு தீ வைக்கப்பட்டமையால், அங்கிருந்த சிறைக்கைதிகளை பதிவுசெய்வதற்கான அனைத்து ஆவணங்களும் அழிவடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜீ.டப்ளியூ.கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையின் நலன்புரி பிரிவிற்கும், நூலகத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனர்த்தத்தில் இழக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தின் கோவைகளில் இருந்து பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதனால், தண்டனை விபரங்களை பெறுவதில் நெருக்கடி ஏற்படாது எனவும், கைதிகளின் வழக்கு விசாரணைகளுக்கும் தடங்கள் ஏற்படாது எனவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் நேற்று முற்பகல் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஐந்து சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 33 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழு தமது அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படவுள்ளது.
0 comments :
Post a Comment