50 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் கைது
நீர்கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள எட்டு வீடுகளில் 50 இலட்சம் ரூபா பெறுமதியன நகைகள் பணம் மற்றும் பல்வேறு பொருட்களை திருடிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் நகைகளை மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ தெரிவித்தார்.
நீர்கொழும்பு தளுபத்த , தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே கைது சேய்யப்பட்டவராவார்.
இவர் சூதாட்டம் மற்றும் கரோக்கி நிலையங்களுக்கு செல்லும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கடந்த வருடம் யூலை மாதம் முதல் இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
தளுபத்தை –சிரமதான மாவத்தை ,தளுபத்தை- தெனிய வீதி , ஏத்துக்கால –கனத்த வீதி , யூட் மாவத்தை (ஏத்துக்கால ),கட்டுவ ஆகிய பகுதிகளில் உள்ள எட்டு வீடுகளில் சந்தேக நபர் பணம் -நகை , லெப்டொப், கமரா , செல்லிடத் தொலைபேசி , கைக்கடிகாரம் போன்றவற்றை திருடியுள்ளார்.
தளுபத்தை ,சிரமதான மாவத்தையில் வைத்தியர் ஓருவரின் வீட்டில் ஆறரை இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தையும் ஆறரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் கடந்த வாரம் சந்தேக நபர் திருடியுள்ளார்.
.தெனியாய வீதியில் உள்ள வீடொன்றில் 4 இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும் , 300 யூரோக்களையும், ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் லெப்டொப் ஒன்றையும் சந்தேக நபர் திருடியுள்ளார்.
கட்டுவ தேவாலயம் அருகில் உள்ள வீடொன்றில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் , கடிகாரம் , இரண்டு கமராக்கள் ஆகியவற்றை சந்தேக நபர் திருடியுள்ளார் .
சந்தேக நபர் இலங்கை வந்துள்ள வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் வசிக்கும் வீடுகளிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளார் .
இத்திருட்டு செயல்கள் வீட்டில் ஆளில்லாத இரவு வேளைகளிலும் இரவு 6 மணிக்கும் 9 மணிக்குமிடையில் இடம்பெற்றுள்ளது .
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் உத்தரவின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த பெரேரா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்-விக்கிரமசிங்க பொலிஸ் கான்ஸ்டபிள்களான சேனாரத்ன ,உக்குபண்டா ,அரிச்சந்திர , வீரதுங்க ஆகியோரை கொண்ட குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment