Sunday, January 8, 2012

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மீண்டும் 17 இல் போராட்டம்.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இம்மாதம் 17 ஆம் திகதி அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளதாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இம்மாதம் 12ம் திகதி கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி தமது தீர்மானத்தை ஊடகவியலாளருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மீண்டும் இப்பகிஸ்கரிப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற வருடம் யூலை மாதம் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டும், தேசிய மொத்த வருமானத்தில் 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்கவேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து விரிவுரைகளைப் பகிஸ்கரித்து வந்தனர். இப்பகிஸ்கரிப்பைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கம் ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து இப்பகிஸ்கரிப்புப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையின்போது ஆசிரியர் சம்பளம் மூன்று கட்டமாக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை உயர்த்தப்படவில்லை.

வரவு செலவுத்திட்டத்திலும் எமது கோரிக்கைகள் தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பான அறிவித்தல் டிசம்பர் 31ம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தும் எதுவித அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை. எனவே இவ்விடயங்களை எதிர்வரும் 12ம் திகதி பத்திரிகை வாயிலாக தெரிவித்து 17ம் திகதி அடையாள பகிஸ்கரிப்பில் ஈடுபட்டபின் அடுத்த கட்ட முடிவுகளை பின்னர் எடுக்கவுள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com