பிரான்ஸிடம் ரூ.14,220 கோடியில் 490 அதிநவீன விமான ஏவுகணைகளை வாங்கும் இந்தியா!
இந்திய விமானப்படையிலுள்ள மிராஜ்-2000 ரக போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக ரூ.14,220 கோடி செலவில் 490 நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் (DASSAULT AVIATION) நிறுவன தயாரிப்புத்தான் மிராஜ்-2000 போர் விமானங்கள். பல ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் பயன்பாட்டிலுள்ள இந்த விமானங்கள் எதிரி நாட்டு விமானங்களை நடுவானில் வழிமறிப்பது, குறைந்த உயரத்தில் பறந்து எதிரிகளின் ரேடர்களுடைய கண்களில் படாமல் இலக்கைத் தாக்குவது, எதிரி நாட்டின் ரேடர்களை ஜாம் செய்து செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட திறன்களைக் கொண்டது.
இந்தியாவிடம் இந்த ரகத்தைச் சேர்ந்த 51 விமானங்கள் உள்ளன. இவை இப்போது ரூ. 23,601 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்தோடு இந்த விமானங்களில் நவீன ஏவுகணைகளையும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியான ரூ.14,220 கோடி செலவில் நவீன ஏவுகணைகளை
பிரான்ஸ் நாட்டின் தேல்ஸ் (Thales) நிறுவனத்திடம் வாங்கப்படவுள்ளன.
இந்த ஏவுகணைகள் எதிரி நாட்டின் விமானங்களை விரட்டிச் சென்று தாக்கி அழிக்கக்கூடியவை.
இந்திய விமானப்படையில் உள்ள மிகச் சிறந்த விமானங்களில் ஒன்றான மிராஜ்-2000 விபத்துக்களை அதிகம் சந்திக்காத விமானம் ஆகும்.
இது தவிர சுவிஸ் நாட்டிடம் இருந்து ரூ.6468 கோடி செலவில் 75 பிலேடஸ் PC-7 ரக பயிற்சி விமானங்களையும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியப்படையிலுள்ள HPT 32 ரக பயிற்சி விமானங்கள் மிகவும் பழசாகி விட்டன. அதில் அவ்வப்போது எஞ்சின் கோளாறுகள் ஏற்பட்டு பயிற்சியும் பாதிக்கப்பட்டு வருவதால், பிலேடஸ் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதியை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு நேற்று அளித்தது.
இந்த விமானங்கள் தவிர ரேடர்களின் கண்ணில் படாமல் தப்பிக்கும் திறன் கொண்ட அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானங்கள் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பு பணிகள் 2020ம் ஆண்டில் முடிவடையும். அப்போது சுமார் 3.23 இலட்சம் கோடி ரூபா செலவில் 300 விமானங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.
0 comments :
Post a Comment