13வது பிளஸ்ஸுல் எதை உள்ளடக்குவது என்பது பற்றி தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (30) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
13வது பிளஸ் என்ற விடயத்தை நான் நேற்று இன்று அல்ல தொடர்ந்தும் கூறி வருகிறேன். மஹிந்த சிந்தனை திட்டத்திலும் உள்ளடக்கியுள்ளேன்.
13வது பிளஸ் திட்டத்தில் எதனை உள்ளடக்குவது என்பது தொடர்பில் தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்துள்ளேன்.
எனவே எதிர்கட்சிகள் சற்று பொறுப்புடன் சிந்தித்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் பிரச்சினைக்கு தீர்வு பெறுவது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படக்கூடும்.
இது ஊடகங்களினதோ, ஜனாதிபதியினதோ, எதிர்கட்சித் தலைவரினதோ தனிப்பட்ட பிரச்சினை அல்ல. நாட்டு மக்களின் தேசியப் பிரச்சினை. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
அதனால் விரைவில் இது தொடர்பில் தெளிவுபடுத்த பாராளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை விரைவில் நான் சந்திக்க உள்ளேன்.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அனைத்துக் கட்சிகளும் கூடி 13வது பிளஸ்ஸில் இவற்றைதான் உள்ளடக்க வேண்டும் எனக் கூறினால் நான் அதனை செயற்படுத்துவேன்.
இது இவ்வாறிருக்கையில் சில ஊடகங்கள் நாடு தொடர்பில் சர்வதேசத்திற்கு தவறான தகவல்களை வழங்கி வருகின்றன. இந்த ஊடகங்கள் நாடு தொடர்பில் நினைத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஊடகங்கள் நினைத்தால் 6 மாதங்களுக்குள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். ஆனால் நாடு தொடர்பில் முதலில் சிந்திக்க வேண்டும்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே தேசியப் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் பெற முடியும்.
மேலும் இந்தியாவுடன் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளபோதிலும், அரசியல் தீர்வு பற்றிய இறுதி முடிவினை நாடாளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக அனைத்துக்கட்சி உறுப்பினர்களையும் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment