LLRC அறிக்கையை வரவேற்கும் இந்தியா 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோருகின்றது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லணக்க ஆணைக்குழு வின் அறிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. அறிக்கையை வரவேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்க அரசை வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கையில் தமிழர் பகுதிகளில் நடந்த கடத்தல்கள், காணாமல்போதல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள விஷ்ணு பிரகாஷ், 'அப்பாவி மக்கள் பாதிப்பிற்குள்ளாகக் காரணமான மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த தனித்த ஆணையம் அமைப்பது என்கிற சிறிலங்க அரசின் திட்டத்தை நாங்கள் அறிவோம்' என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய ஜதிப மகிந்த ராஜபக்ச, மக்கள் வாழும் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம்களை விலக்கிக்கொள்வோம் என்றும், அவர்கள் பாதுகாப்புத் தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் தடுப்போம் என்றும் கூறியிருந்ததையும் விஷ்ணு பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளபடி, தமிழர் பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு தமிழர் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கனவே அளித்த உறுதி மொழியின்படி, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நீடித்த தீர்வு காண சிறிலங்க அரசு முற்பட வேண்டும் என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment