இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அநேக குற்றச்சாட்டுக்களுக்கு, கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறந்த பாடமென ஐரோப்பிய பாராளுமன்ற பாதுகாப்பு துறை தலைவர் ஜெப்ரி வேன் வோர்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் அன்னியத்தரப்புக்கள் அதற்கு உதவியை மட்டுமே புரிய வேண்டுமெனவும் வேன் வோர்டன் தெரிவித்துள்ளார்.
தனது இலங்கை விஜயத்தின் அனுபவங்களை நினைவுகூர்ந்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர் புதிய எதிர்ப்பார்ப்புக்களை கொண்ட மனிதர்களும் பொருளாதார மறுமலர்ச்சியும் இலங்கையில் காணக்கிடைத்ததாக தெரிவித்தார்.
30 வருட கால பயங்கரவாத யுத்தத்தை நிறைவுபெற்று அபிவிருத்தி பாதையில் செல்லும் இலங்கைக்கு கைகொடுத்து உதவுவது சர்வதேசத்தின் பொறுப்பாகும். தமிழ், முஸ்லிம் மக்களே பயங்கரவாதத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வும், அரசியல் ஒற்றுமையும் அவசியமெனவும் ஐரோப்பிய பாராளுமன்ற பாதுகாப்பு துறை தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் பிரிவினை வாதத்தின் பின்னால் செல்லாமல் உலகெங்கும் வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் ஏனைய தரப்பினரும் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டு; வரும் நல்லிணக்கத்திற்கு பக்கபலமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment