Tuesday, December 13, 2011

துமிந்தவை கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கை- கள் யாது? CID யினரிடம் நீதிமன்று கேள்வி

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை கைது செய்வது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனைக் கோரியுள்ளதாக இரகசிய பொலிஸார் இன்று நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும் இதுவரை சட்ட மா அதிபரின் ஆலோசனை தமக்குக் கிடைக்கப்பெறவில்லை என அவர்கள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை செயற்படுத்த சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளமை தொடர்பில் பாராத லக்ஷ்மன் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இரகசிய பொலிஸாரிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு சர்வதேசப் பொலிஸாரிடம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றில் கேட்டுக் கொண்டார்.

சர்வதேச பொலிஸாரிடம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்க சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஏதுவான திட்டங்கள் இருப்பதாக இதற்குப் பதிலளித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ் தெரிவித்தார்.

அதனால் துமிந்த சில்வாவை கைது செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் எதிர்வரும் 29ம் திகதி அறிக்கை சமர்பிக்குமாறு நீதவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, முல்லேரியா மோதலில் துமிந்த சில்வாவுக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான புகைப்படத்தை அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய சமர்பித்தார்.

மேலும் துமிந்த சில்வாவின் தலை பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அவரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் துமிந்த சில்வா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதேவேளை, பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரசன்ன டி அல்விஸ் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment