தமிழகத்துக்கு தப்பி செல்லும் தமிழர்களை தடுத்து நிறுத்தும் கேரள சிறப்பு அதிரடிப்படை!
கேரள உளவுத்துறை எச்சரிக்கையால் தமிழகத்திற்கு தப்பி செல்லும் தமிழர்களை தடுக்க எல்லையில் சிறப்பு அதிரடிப்படையை அம்மாநில அரசு குவித்துள்ளது. தமிழகத்திற்கு செல்வோரை மிரட்டி கேரளாவுக்கே திருப்பி அனுப்புகின்றனர். முல்லை பெரியாறு விவகாரத்தால் கேரளா மற்றும் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதால், தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. கேரளாவில் தொடர்ந்து தமிழர்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்கு அஞ்சி ஏலத்தோட்டங்களில் பணியாற்றிய தமிழர்கள் பலர் அகதிகள் போல் தேனி மாவட்டம் கம்பம், தேவாரம் பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளதாக தமிழகத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Ôதமிழர்களை சிலர் குறி வைத்து தாக்குவதால், தமிழ்நாட்டில் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்கள் பாதிக்கப்படக்கூடும். எனவே கேரளாவில், தமிழர்கள் மீதான தாக்குதலை உடனே தடுத்து நிறுத்தவும், அகதிகளாக தமிழகம் செல்வோரை சமாதானம் செய்து தடுத்து நிறுத்துங்கள்Õ என்றும் அம்மாநில அரசுக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனால், பிரச்னை அதிகமுள்ள இடுக்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கேரள சிறப்பு அதி ரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து எந்தெந்த பகுதிகள் வழியாக தமிழர்கள் தப்பிச் செல்கின்றனர் என கணக்கெடுத்து அப்பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மலைப்பகுதிகள் வழியாக தமிழகத்திற்கு புறப்பட்டு வரும் மக்களை, கேரள போலீசார் தடுத்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். Ôஉங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். தைரியமாக நீங்கள் இங்கே வசிக்கலாம்Õ என்று கூறி மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை மிரட்டி பணிய வைக்கின்றனர்.
இதனால் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள சாக்கலூத்து மெட்டு வழியாக வருவோரின் எண்ணிக்கை இன்று மிகவும் குறைந்து விட்டது எனவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முல்லை பெரியாறு விவகாரத்தால் 15வது நாளாக இன்றும் கம்பம் வழியாக கேரளாவுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர் பதற்றத்தால் உத்தமபாளையம் தாலுகாவில் 144 தடையுத்தரவு தற்போது வரை விலக்கி கொள்ளப்படவில்லை. தேனி மாவட்டத்தில் இன்றும் பல்வேறு இடங்களில் கேரள அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடந்தன.
0 comments :
Post a Comment