கறைபடிந்த காவல்துறை! - சகாயராஜ்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களை காவலர்களே பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. கதறி அழுத 3 மாதம் நிறைமாத கர்ப்பிணியை கற்பழித்த தமிழக காவல்துறை கறைபடிந்ததாகி விட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில் வாழ்ந்து வரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா மாதேஸ்வரி திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் இரவில் காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல் அங்குள்ள தைல மரக்காட்டில் நான்கு பெண்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர் காவல்துறையினர்.
காவல்துறையினரிடம் வள்ளி என்ற பெண்மணி அவர்களை விட்டுவிடுமாறு மன்றாடியபோதும், கண் முன்னாலேயே அவரது மகளையும் மருமகளையும் காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். லட்சுமி என்ற மூன்று மாத கர்ப்பிணியை காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்தது கொடுமை நெஞ்சை உறைய வைக்கிறது. காலில் விழுந்து மன்றாடியபோதும், மிருகங்கள் கூடச் செய்யத் துணியாத கொடுமையை காவல்துறையினர் செய்து உள்ளனர்.
பரமக்குடியில் 7 தலித் இளைஞர்களை அக்கிரமமாகச் சுட்டுக்கொன்ற காவல்துறையினர் அப்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படிப்பட்ட காரியத்தை செய்யத் காவலர்களுக்கு துணிவு வந்திருக்குமா? என்பது பலரது கேள்வியாக உள்ளது.
தவறு செய்த காவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால்தான், எந்த அக்கிரமத்தையும் நடத்தலாம் என்கின்ற திமிரோடு இந்தக் கொடுமையை மண்டபம் கிராமத்தில் காவல்துறையினர் நடத்தி உள்ளனர்.
19 ஆண்டுகளுக்கு முன்பு 1991 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடிப் பெண்களை அன்று அ.தி.மு.க. ஆட்சியின்போது காவல்துறையினரும், வனத்துறையினரும் பலாத்காரம் செய்தனர். அந்தக் கொடியவர்களுக்கு, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றம் தற்போதுதான் தண்டனை விதித்து உள்ளது.
அதற்குப் பிறகு இப்பொழுது மீண்டும், அதே போன்ற ஒரு கொடூரத்தை, ஈவு இரக்கம் இன்றித் தமிழகக் காவல்துறையினர் நடத்தி உள்ளனர். இது தமிழ்நாட்டின் காவல்துறைக்கு ஏற்பட்டு உள்ள அகற்ற முடியாத கறையும் களங்கமும் ஆகும். இந்த காட்டுமிராண்டிச் செயலில் ஈடுபட்ட திருக்கோவிலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகர், போலீஸ்காரர்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தீர்வாகாது.
சம்பந்தப்பட்ட காவலர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதோடு அவர்கள் மீது தமிழக அரசு, வரும் காலத்தில் இதுபோன்ற ஒரு தவறை காவலர்கள் செய்யக்கூடாது அளவுக்கு தண்டனை இருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
காவல்துறை எனது நண்பன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவதை விட்டுவிட்டு, கரைபடிந்த காவல்துறையின் களங்கத்தை துடைக்க அவர் முன்வர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.
நன்றி வெப்துனியா
0 comments :
Post a Comment