விமானப் பயணத்தில் நீங்கள் யாருக்கு அருகே அமர விரும்புகிறீர்கள் என்ற முடிவு செய்யும் பொறுப்பை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் காலம் வரப்போகின்றது. இன்னும் சில மாதங்களில், குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட விமானத்தில் புக் பண்ணியுள்ள உங்கள் சக பயணிகளில், யாருக்கு அருகே உங்களது சீட் அமைய வேண்டும் என நீங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
கே.எல்.எம். (KLM) விமான நிறுவனம் இந்தத் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் (2012-ன் ஆரம்பத்தில்) அறிமுகம் செய்கிறது. ‘meet and seat’ என்பது இந்தப் புதிய திட்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்.
விமானத்திலுள்ள சக பயணிகளின் Facebook அல்லது LinkedIn ப்ரொஃபைலில் உள்ள விபரங்களைக் கொண்டு, உங்களுக்கு அருகே அமர வேண்டிய பயணியை நீங்கள் தேர்ந்தெடுப்பதே இதன் அடிப்படை. குறிப்பிட்ட விமானம் ஒன்றில் நீங்கள் சீட் புக் கெய்யும்போது, அந்த விமானத்தில் ஏற்கனவே புக் செய்துள்ளவர்களின் பெயர்கள், மற்றும் அவர்களது பப்ளிக் ப்ரொஃபைல்களை நீங்கள் பார்க்க முடியும், அதிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பதே திட்டத்தின் விரிவாக்கம்.
“உங்கள் விமானப் பயண நேரத்தில் ஒரே துறையில் உள்ளவர்கள் தத்தமது விசிட்டிங் கார்டுகளை பரிமாற்றம் செய்து கொண்டு தொழில் ரீதியாக பலன் பெறலாம். அல்லது, பயண நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை பேசக்கூடிய ஒருவருக்கு அருகே அமர்வதன் மூலம், பயண நேரத்தை சுவாரசியமாக மாற்றிக் கொள்ளலாம்” என்கிறது KLM.
பயணிகளை முன்கூட்டியே அறிமுகம் செய்து வைக்கும் இந்தத் திட்டத்துக்கு KLM விசேட கட்டணம் அறவிடப் போகின்றதா, அல்லது டிக்கெட் கட்டணத்தில் இதுவும் அடக்கமா என்பது தெரியவில்லை. தற்போது அனேக ஏர்லைன்கள் சீட் அஸைன்மென்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. அந்த விதத்தில் ஒருவேளை ஆரம்பத்தில் இது இலவச சேவையாக அறிமுகம் செய்யப்பட்டாலும், நாளடைவில் கட்டணம் அறவிடுவார்கள் என்று ஊகிக்கலாம்.
இதிலுள்ள இரு ‘இஃப்’கள் என்ன? முதலாவது, சக பயணிக்கும், உங்களுக்கும் Facebook அல்லது LinkedIn ப்ரொஃபைல் இருக்க வேண்டும். இரண்டாவது, புக்கிங் செய்யும்போது, அந்த ப்ரொஃபைல் சக பயணிகளுக்கும் தெரிவதில் தமக்கு ஆட்சேபணை கிடையாது என்று பயணி ஒப்புக்கொண்டு, புக்கிங் ஸ்கிரீனில் அதற்கான இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
அட, மூன்றாவதாகவும் ஒரு விவகாரம் இருக்குங்க. மண்ணடியிலுள்ள மக்காச் சோள வியாபாரி, தம்மை மைக்ரோசாஃப்ட் எக்ஸிகியூடிவ் என்று Facebook அல்லது LinkedIn ப்ரொஃபைலில் குறித்திருந்தால், நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
அப்படிச் சிக்கிக் கொண்டால், சோள வியாபாரியுடன் KLM விமானத்தில், “சொல்லுங்கோள்” என்று உரையாடிக் கொண்டு சோழ காலத்துக்கு போகலாம்!
No comments:
Post a Comment