டெங்கு நோய் பரவும் அபாயம்! ஏறாவூரில் இரு தினங்கள் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்.
டெங்கு நோய் துரிதமாக பரவும் அபாயம் காணப்படும் மாவட்டங்களின் கீழ், அபாய எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், அநுராதபுரம், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், கண்டி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில், இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.
சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், நாடெங்கும் நுளம்பு பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளதாக, தெரியவந்துள்ளது. தற்போதைய காலநிலையும், டெங்கு பெருக்கத்திற்கு, மிகவும் சாதகமாக உள்ளதுடன், நுளம்பு பெருக்கத்தை தடுப்பதற்காக, அனைத்து தரப்பினரது பங்களிப்பையும், சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது
ஏறாவூரில் எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களை, டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்த, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் மேலதிக செயலளார் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பகுதியில் கடந்த 11 மாதங்களில், 512 பேர், டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உயர்மட்ட மாநாடொன்று, பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித மஹிபால, மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை உட்பட உயர் சுகாதார அதிகாரிகள் பலரும், இதில் கலந்து கொண்டனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவில் உள்ள 30 தலைவர்களின் கீழ், 100 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை கண்காணித்தல், சுத்தம் செய்தல், அறிவுறுத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள், மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கென 20 உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இதில், பொலிஸார் உட்பட 100 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பிரமுகர்கள், அங்குள்ள நோயாளர்களை பார்வையிட்டனர். இரத்த பரிசோதனைக்கான நவீன இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்கு, 30 லட்சம் ரூபா ஒதுக்குவதாக, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித மஹிபால அங்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment