கப்பம் கேட்ட சம்பவம் தொடர்பாக அண்ணன், தம்பி இருவர் கைது
பாலர் பாடசாலையில் படிக்கும் சிறுவன் ஒருவனை கடத்தி செல்வதாக அச்சுறுத்தி, இரண்டு இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக கேட்ட அண்ணன் , தம்பி இருவரை கைது செய்துள்ளதாக, நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தை சேர்ந்த குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரீட்சகர் ஜகத் நிசாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
திவுலப்பிட்டிய – தம்மிட்ட, ஹசனுமுல்லை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
சந்தேக நபர்கள் இருவரும் வீதியில் தனியாக செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் சென்று நீண்டகாலமாக பறித்து வந்துள்ளனர். கொச்சிக்கடை , நீர்கொழும்பு, கொட்டதெனியாவ ஆகிய பிரதேசங்களில பெண்கள் மூவரின் தங்கச் சங்கிலிகளைப் பறித்து சென்றுள்ளதாக கொச்சிக்கடை பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சந்தேக நபர்களின் ஒருவரான அண்ணன் மோட்டார் சைக்கிளை செலுத்த பின்
னால் அமர்ந்து பயணிக்கும் தம்பி பெண்களின் தங்கச் சங்கிலிகளை பறித்து வந்துள்ளார், பெண்ணொருவரின் கையிலிருந்து பறித்துச் செல்லப்பட்ட கைப்பையிலிருந்த , அந்தப் பெண்ணின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி சந்தேக நபர்கள் செல்லிடத் தொலைப்பேசிக்கான சிம் அட்டை ஒன்றையும் பெற்றுள்ளனர்.
தங்கச்சங்கிலியை அபகரித்து சென்றமை தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது , இந்த கப்பம் தொடர்பான சம்பவம் தெரிய வந்துள்ளது மாபோதல பிரதேசத்தை சேர்ந்த பிரியன்த சமன்குமார என்பவர் இந்த கப்பம் கோரல் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரண்டு இலட்சம் ரூபா கப்பப் பணம் கேட்டு பெற்றோரை அச்சுறுத்தி பிள்ளையை கடத்த முயற்சித்தமை , வீதியில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை பறித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மேற்படி குற்றச் செயலுக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய சங்கச் சங்கிலிகள் மூன்று என்பனவற்றை பொலிசர் கைப்பற்றியுள்ளனர் .
நீர்கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பத்தி ,நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி ஆனந்த பெர்னாந்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உதவிப்பொலிஸ் பரீட்சகர் ஜகத் நிசாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், திருடப்பட்ட நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
0 comments :
Post a Comment