Friday, December 9, 2011

ரஷ்யாவில் கலவரத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது : புடின் ஆவேசம்!

ரஷ்யாவில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி எதிர்க்கட்சிகளை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தூண்டி விட்டுள்ளார் என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது. எனினும், தனிப்பெரும்பான்மை பெறவில்லை. அத்துடன், தேர்தலில் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன, முறைகேடுகள் நடந்துள்ளன, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. புடினை எதிர்த்து மாஸ்கோவில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்தான் காரணம் என்று ரஷ்ய பிரதமர் புடின் கூறியுள்ளார். இதுகுறித்து புடின் நேற்று கூறியதாவது:

அமெரிக்காவுக்கு நிகராக அணுசக்தி கொண்ட பலத்துடன் ரஷ்யா இருக்கிறது. அதை பலவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ரஷ்ய தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய எதிர்க்கட்சிகளை வன்முறையில் ஈடுபட சிக்னல் கொடுத்துள்ளார். அத்துடன் வன்முறையை தூண்டிவிட கோடிக்கணக்கான டாலர்களையும் அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இவ்வாறு புடின் ஆவேசமாக கூறியுள்ளார். இதற்கிடையில் நாளை மாஸ்கோவில் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி நடத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அப்போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க 50 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment