வன்னி மக்களுக்கு மண்வெட்டி கூட இல்லை. கனடிய புலி வானொலியில் ஒப்பாரி! சிவசக்தி ஆனந்தன்
மூன்று நேரமும் சோறுண்டு சந்தை நாட்களில் தேங்காய், நெல்லு விற்று "நவீனத்தில்" இரண்டு கள்ளடித்துப் பாடிப்பாடி வீடு போன மக்களை பிச்சைக்காரர்களாக்கிய புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய ஆசாமிகள் இன்று வன்னி மக்கள் என்று பிரலாபித்து அதற்கும் "உண்டியல்" தூக்க அலைகிறார்கள்.
கனடாவில் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் வந்திருந்த பொழுது நூறு டாலர் டின்னர் நடத்தி சம்பந்தன் கம்பனிக்கு பணமுடிப்பு வழங்கியவர்கள் அந்தப் பணத்தில் மண்வெட்டி வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதாகத் தெரியவில்லை. சுமந்திரன் தங்களுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்டு அவர்களின் வரவின் உத்தேசம் என்ன என்பதை பகிரங்கமாகவே வெளிக்காட்டினார்கள்.
புலிகள் வன்னியில் காட்டுத் தர்பார் நடத்திய பொழுது தேனும் பாலும் ஓடுவதாக "பாவ்லா" காட்டி மக்கள் படும் துன்பங்களை மறைத்து கனடாவில் சில்லறை சேர்த்தவர்கள் இப்பொழுது வன்னி மக்கள் மேல் கரிசனை உள்ளதாகப் புலம்புவது வெறும் பம்மாத்து என்பதை சொல்லத் தேவையில்லை.
புலிகள் வன்னியில் காலடி எடுத்து வைத்த நாள் தொடக்கம் வன்னி வாழ் விவசாயப் பெருங்குடி மக்களின் வாயில் மண்தான் விழுந்தது. அவர்களின் கையிலிருந்த மண்வெட்டிகளைப் பிடுங்கி விட்டு வயோதிபர்களுக்கு "கொட்டனும்" இளையோருக்குத் துப்பாக்கியும் கொடுத்து விவசாயத்தையே அழித்தார்கள். இளம் பெண்களுக்கு வயிற்றில் குண்டுகளைக் கட்டி விட்டார்கள். அரசு கொடுத்த மாவையும், அரிசியையும், சீனியையும் புலிகள் பதுக்கி அதே வன்னி மக்களுக்குக் கொள்ளை விலையில் விற்று கிடைத்த கொள்ளை லாபத்தில் கோபாலசாமிக்கும் நெடுமாறனுக்கும் கொட்டாவி விட வாரியிறைத்தார்கள். அது மட்டுமா இலங்கையைப் பிரித்துக் கொடு என்று சொல்லிக் கொண்டு கோடிக் கணக்கில் செலவு செய்து கொழும்பில் தொடர்மாடிகள் கட்டி வாடகைக்கும் விற்பனைக்கு விட்ட சூரப் புலிகள் பற்றி எந்த விமர்சனமும் செய்யாத தமிழர் கூட்டமைப்பினர் இன்று மண்வெட்டிக்கு யாரிடம் பணம் கேட்கிறார்கள்?
பிரபாகர சமாதிக்குப் பின்னர் புலிகளின் பெயரால் வெளிநாடுகளில் சுருட்டிய பணத்துக்கும் அந்தப் பணத்தின் மூலம் வாங்கப்பட்ட கடை கண்ணிகளுக்கும் குடுமிபிடி சண்டை போடும் கும்பல்கள் வன்னி என்று வாய் திறந்து இன்னமும் "சில்லறை" கிடைக்குமா என்று அங்கலாய்க்கிறார்கள்.
இரண்டாம் கிளாஸ் தமிழ் செல்வனின் "கட்டளைகளுக்குக்" காதில் செல்போனுடன் நின்ற சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள் அப்பொழுது மண்வெட்டி, கலப்பை எல்லாவற்றையும் மறந்து நின்றார்களா?
போதாக் குறைக்கு வன்னி மக்கள் யுத்த களத்தில் முள்ளிவாய்க்காலுக்கு இடம் பெயர்ந்தார்களாம் அப்பொழுது உழவு இயந்திரங்களையும் கொண்டு போனார்களாம் அவற்றை எல்லாம் இராணுவம் அழித்தார்களாம் என்றும் எஞ்சிய இரும்பைக் கடத்துகிறார்கள் என்றும் இந்த வானொலிக் கேடிகள் அழுகிறார்கள். புலிகள் வன்னிக்குப் போனவுடன் மக்களுக்கு உழவு இயந்திரங்கள் வாங்கிக் கொடுத்தார்களா அல்லது இருந்தவற்றை பிடுங்கிக் கொண்டு போனார்களா? அவ்வாறு பிடுங்கிய வாகனங்களிலிருந்து உபயோகமான பல உதிரிப் பாகங்களை எப்பொழுதோ புலிகள் சிங்களவர்களுக்கு விற்றுக் காசாக்கி விட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை மீட்கலாம் என்று அறிவித்த போதிலும் வன்னி மக்கள் அந்த உபயோகமில்லாத இரும்புகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
கனடாவில் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் என்று ஒன்று இருக்கிறது. அது மண்வெட்டிகள் வாங்கிக் கொடுப்பதை விட சம்பந்தனுக்கு சாப்பாடு போடுவதில்தான் அதிக அக்கறை காட்டினார்கள். கனடா தமிழீழச் சங்கம், தமிழீழச் சங்கம், கனடா என்று சங்கம் வைத்து கனடிய அரசு வழங்கிய பணத்தையே "கைமா" பண்ணியவர்கள்தான் இப்பொழுது கனடா தமிழர் கூட்டணி என்று காது குத்துகிறார்கள். இதுவரையில் சம்பந்தன் கம்பனி வன்னி மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் என்று ஒரு தகவலையும் காணோம். கொழும்பிலும் தமிழ் நாட்டிலும் ஹாயாக வாழக் கற்றுக் கொண்டவர்களுக்கு தமிழர்களின் வாக்குகள் மட்டும்தான் தேவை. அவர்களுக்கு மண்வெட்டி உட்பட சகலதையும் இராஜபக்ஷ கொடுக்கட்டும் என்று கவலையே இல்லாமல் இருப்பவர்கள் பற்றி வாய் திறவாத உண்டியல் கோஷ்டிகள் இன்று கனடாவில் எதற்காக அழுகிறார்கள்?
இப்பொழுது புலி போய் "வன்னி" வந்துவிட்டது. ராம் சிவலிங்கம் கோஷ்டியினர் மாவீரர் என்று பிரபாகரனுடைய படத்துடன் ஒட்டிய சுவரொட்டிகளை திருச்செல்வம்-நேரு குணா கும்பல் கடாசிவிட்டது. இப்பொழுது புலி, தமிழீழம், தேசியத்தலைவர், மாவீரர் எல்லாம் சொல்லி "வசூல்" பண்ண முடியாது என்பது தெளிவாகிவிட்டதினால் "வன்னி" மக்களுக்கு உதவி செய்ய என்று பல கோஷ்டிகள் கிளம்பியுள்ளனர். ராம் சிவலிங்கம் கோஷ்டியினர் பொற்குவை என்று தொடங்கி ஒரு டாலர் வரை இறங்கிப் பார்த்தார்கள். சரவரவில்லை. சம்பந்தன் வந்து ஒரு பிளேட் சாப்பாட்டுக்கு நூறு டாலர் என்று ஒரு புது வித்தையைக் காட்டியதிலிருந்து கனடாவில் பல கோஷ்டிகள் "நூறு" டாலர் என்று தலையைச் சுற்றப் புறப்பட்டிருக்கிறார்கள். ராம் சிவலிங்கத்தின் கோஷ்டியும் நூறு டாலர் டின்னர் நடத்தி வன்னி மக்களுக்கு என்னமோ பண்ணப் போகிறார்கள் என்று தண்டலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
தமிழர்களே இந்தக் கும்பல்கள் பற்றி ஜாக்ரதையாக இருங்கள். ஏனென்றால் வன்னியில் இந்த ஆசாமிகளுக்கு யாரும் கிடையாது. தொடர்பே இல்லை. இருந்த கிழடு கட்டைகளைக் கூட "கடத்தி" வந்து வெல்பெயர் எடுக்கிறார்கள். யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் வன்னி மக்கள் பற்றி மவுனம் சாதித்தவர்கள் இப்பொழுது துள்ளிக் கொண்டு கிளம்புவது சில்லறைக்குத்தான் என்பதைத் தமிழர்கள் உணர்வது நல்லது.
--மு.சிவானந்தன், கனடா--
0 comments :
Post a Comment