சீனாவில், மரண தண்டனைகளுக்கு பஞ்சம் இல்லை. மரண தண்டனை என்றால், நம் நாட்டை போல் தூக்கிலிடும் வழக்கம் எல்லாம் இங்கு இல்லை. விஷ ஊசி போடுவது அல்லது தலையின் பின் பக்கத்தில் துப்பாக்கியால் சுடுவது ஆகிய இரண்டு முறைகளில் மரண தண்டனை இங்கு நிறைவேற்றப் படுகிறது.
மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச நாடுகளும், காட்டுக் கத்தலாக கத்தியும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், மரண தண்டனையை சர்வ சாதாரணமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது சீனா. கடந்த, 2005ல் மட்டும், 10 ஆயிரம் பேருக்கு இங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நடவடிக்கைகள், வெளி உலகத்துக்கு அதிகம் தெரியாமல் ரகசியமாக நடக்கும். இதையும் மீறி, ஒரு சில தண்டனைகள் பற்றிய விஷயங்கள், வெளி உலகத்துக்கு கசிந்து கொண்டு தான் இருக்கின்றன.
போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு, 2003ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது, அந்த நான்கு பெண்களின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. அந்த புகைப்படங்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஹாங்காங்கை சேர்ந்த ஒரு, "டிவி' சேனலில் வெளியாகி, சர்வதேச அளவில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மா ஷிங்குய், லி ஜூகுவா, டாய் டொங்குய், ஹி ஜியுலிங் என்ற நான்கு பெண்களுக்கும், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள், வுகான் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தண்டனை நிறைவேறுவதற்கு முதல் நாள் இரவே, இவர்களின் கடைசி நிமிடங்களை பதிவு செய்வதற்கு கேமராமேன்கள் வந்து விட்டனர். முதல் நாள் இரவு, 9:00 மணிக்கு துவங்கி, தண்டனை நிறைவேற்றப்படும் அடுத்த நாள் காலை, 7:21 வரை, அவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு நிகழ்விலுமே, நான்கு பெண்களுமே, சாவைக் கண்டும் சற்றும் கலங்காமல், புன்னகையுடனேயே காணப்பட்டனர்.
முதல் நாள் இரவில் நான்கு பேருமே, தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டிருந்தது. அந்த இரவுப் பொழுதில், தண்டனை நிறைவேற்றப்படும் போது அணிய வேண்டிய உடையை, தானே தேர்வு செய்து அணிந்து கொண்டார், டொங்குய். இதன்பின், இரவு உணவு சாப்பிட்டார். இது, அவரின் கடைசி உணவு என்பதால், அங்கு இருந்த பெண் அதிகாரியே, அவருக்கு உணவை ஊட்டி விட்டார். சிரித்த முகத்துடன், அதை மகிழ்ச்சியாக சாப்பிட்டார், டொங்குய்.
இரவு, 10:15 மணிக்கு மற்றொரு அறையில், லி ஜூகுவாவின் கடைசி ஆசை, எழுத்துக்களாக பதிவு செய்யப்பட்டன. தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் புன்னகையுடன் அமர்ந்தபடி, தன் கடைசி ஆசைகளை அவர் கூற, அதை சிறை அதிகாரி, கனத்த இதயத்துடன் பதிவு செய்து கொண்டார். தண்டனை பெற்றவர்களில், மிக இளையவரான, 25 வயது ஜியுலிங்கின் அறையிலும் இதே காட்சி காணப்பட்டது. சிறிய ஸ்டூலில் சிரித்தபடி அமர்ந்திருந்த ஜியுலிங்கிற்கு, பெண் அதிகாரி, கடைசி உணவை ஊட்டி விட்டார்.
அதிகாலை 4:00 மணிக்கு, நான்கு பேரும், ஒரே அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் காவல் அதிகாரிகளும், சக கைதிகளும் அமர்ந்திருக்க, தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்கு செல்வதற்கான ஷூவை, ஜியுலிங்கிற்கும், மற்றவர்களுக்கும், பெண்களுக்கு அதிகாரிகள் அணிவித்து விட்டனர். அப்போது, மிகவும் கலகலப்பாக காணப்பட்ட ஜியுலிங், காவல் அதிகாரிகளுடனும், சக கைதிகளுடன், ஜோக் அடித்தபடி இருந்தார்.
பொழுது புலர்ந்தது. அந்த நான்கு பெண்களுக்கு மட்டும், "அடுத்த நாள் பொழுது புலர்வதை காண்பதற்கு, நாம் உயிருடன் இருக்கப் போவது இல்லை...' என்ற உண்மை உள்ளுக்குள் உறைத்தது.
அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், சுறுசுறுப்பாக குளித்து முடித்து, புன்னகையை உதட்டில் உறையவிட்ட படியே, கடைசி பயணத்துக்கு தயாராயினர். காலை, 7:00 மணிக்கு நான்கு பேரும், மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன், அன்று தண்டனை நிறைவேற்றப்படவிருந்த மேலும், 20 கைதிகள் காத்திருந்தனர். அனைவரும் வரிசையாக நடத்தி, அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்ற மூன்று பேரும், சிரித்த முகத்துடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்க, வயதில் இளையவரான ஜியுலிங் முகத்தில் மட்டும், புன்னகை மறைந்து, கலவர ரேகைகள் சூழ்ந்தன. நடந்து செல்லும் போதே, அவரது மனதில் மரண பீதி ஏற்பட்டது.
வயிற்றுக்குள் இனம் புரியாத, ஏதோ ஒரு பிரளயம் ஏற்பட, கண்களை முட்டிக் கொண்டு கண்ணீர் எட்டிப் பார்க்க, அழுகையை கட்டுப்படுத்த முயன்று, முடியாமல் தோற்றுப் போய், அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும், வாய் வழியாகவும், கண்கள் வழியாகவும், அழுகையாகவும், கண்ணீராகவும் வெடித்துச் சிதறின. மரணத்தை தழுவ மனமில்லாமல் வாய் விட்டு உரக்க அழுதார்.
குற்றவாளிகள் அனைவரும், வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு பின், தண்டனையை நிறைவேற்றுவதற்காக துப்பாக்கிகளுடன் போலீசார் தயாராக இருந்தனர்.
காலை, 7:21 மணிக்கு துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் வரிசையாக வெடிக்கத் துவங்கின. துப்பாக்கியில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு சப்தத்தின் முடிவிலும், ஒரு குற்றவாளி அலறித் துடித்தபடி மண்ணில் சாய்ந்தார். ஜியுலிங்கின் முறை வந்தது. கண்களை இறுக மூடி, கடைசி நொடிக்காக காத்திருந்தார். அவரது முகத்தில் அப்போது ஏற்பட்ட உணர்ச்சியை, எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியவில்லை.
சீன போலீசாரின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட, குண்டு எனும் உலோகப் பிசாசு, ஜியுலிங்கின் தலையின் பின்புறத்தில் பாய்ந்து, முன்புறம் வழியாக வெளியில் வந்தது. சில நொடிகளுக்கு முன் உயிருடன் இருந்த ஜியுலிங்கின் உடல், உயிரற்ற உடலாக மண்ணில் சாய்ந்தது. மனித நேயத்தையும், மனித உரிமை ஆர்வலர்களின் கூக்குரலையும், மவுனமாக்கி விட்டு, அந்த இடமே மயான அமைதியில் மூழ்கிப் போனது.
No comments:
Post a Comment