Friday, December 16, 2011

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்.

வங்காளதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம் (30). இவரது மனைவி ஹவா அக்தர் ஜுய் (21). இஸ்லாம் அதிகம் படிக்காதவர். திருமணமானதும் தனது மனைவியை பிரிந்து ஐக்கிய அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ஹவா அக்தர் கல்லூரிக்கு சென்று படித்தார். இதை இஸ்லாம் விரும்பவில்லை. படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் சமையல் வேலையை மட்டும் பார் என்று டெலிபோனில் பேசும்போது கூறினார். அதை ஹவா அக்தர் காதில் வாங்கி கொள்ளவில்லை. தொடர்ந்து படித்தார்.

இந்த நிலையில் திடீரென இஸ்லாம் வங்காள தேசத்துக்கு திரும்பினார். கணவர் திரும்பி வந்ததால் ஹவா அக்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தனது மனைவியிடம் உனக்கு அதிசயமான பரிசு பொருள் கொண்டு வந்து இருக்கிறேன் என கூறிய இஸ்லாம் அவரது கண்களையும், கைகளையும் கயிற்றால் கட்டினார். வாயில் பிளாஸ்திரியால் ஒட்டினார்.

பின்னர் ஈவு இரக்கமின்றி தனது மனைவி ஹவா அக்தரின் வலது கையில் உள்ள 5 விரல்களையும் வெட்டினார். தனது பேச்சை கேட்காமல் கல்லூரிக்கு சென்று படித்ததற்காக இந்த தண்டனை வழங்கியதாக கூறினார். இதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்தனர்.

வேதனையால் துடித்த ஹவா அக்தர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வெட்டப்பட்ட அவரது விரல்களை ஒட்டி வைக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். ஏனெனில் விரல் துண்டான 6 மணி நேரத்துக்குள்தான் ஆபரேசன் செய்து மீண்டும் சேர்த்து வைக்க முடியும் என கூறிவிட்டனர். ஆனால் வெட்டிய விரல்களை அவரது உறவினர் ஒருவர் குப்பையில் வீசிவிட்டார். அவற்றை தேடி எடுத்து வருவதற்குள் நேரமாகி விட்டது என ஹவா அக்தர் தெரிவித்தார்.

இதற்கிடையே கொடூர மனம் படைத்த இஸ்லாம் கைது செய்யப்பட்டார். தற்போது ஹவா அக்தர் தனது தந்தை வீட்டில் தங்கியுள்ளார். இனி தனது கணவருடன் வாழ விரும்பவில்லை என கூறிவிட்டார். அதே நேரத்தில் இடது கையால் எழுதி பழகி வரும் அவர் மீண்டும் கல்லூரி படிப்பை தொடருவேன் என தெரிவித்துள்ளார்.

இந்த கொடிய செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி வங்காளதேச மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com