வைரங்களில் சுருட்டிய பணத்தை, கருணாநிதி கனவிலும் எண்ண முடியாது!
வைரங்களால் கிடைத்த சில பத்து மில்லியன் டாலர் லாபம் – அதைவிட அதிகமாகவும் இருக்கலாம் – அரசு கஜானாவுக்கு செல்லாமல் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் பாக்கெட்டுக்குள் சென்றது என்பதை உறுதிப்படுத்துகிறார்கள் ஜிம்பாப்வேயின் நிர்வாக அமைப்பிலுள்ள சிலரும், அங்குள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளும்.
நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள, அரசுக்கு சொந்தமான வைரச் சுரங்கங்களில் எடுக்கப்படும் வைரங்களையே ஜனாதிபதி அபேஸ் பண்ணுகிறார் என்கிறார்கள் இவர்கள்.
தனது 31 ஆண்டு ஆட்சியில் ராபர்ட் முகாபே பிரமிக்கத் தக்க அளவில் செல்வந்தராக மாறியுள்ளார். பிரமிக்கத்தக்க என்றால், இந்தியாவில் தி.மு.க. ஸ்பெக்ட்ரம்காரர்கள் ஒதுக்கியதெல்லாம் கால்தூசி எனும் வகையில், பிரமிக்கும் அளவில்.
என்னதான் ஜனாதிபதி முகாபேக்கு ஆதரவான அரசு அதிகாரிகள், வைரச் சுரங்கங்களில் கிடைக்கும் வைர எண்ணிக்கையில் நிஜ கணக்கு காட்டினாலும், அதிலிருந்து வரவேண்டிய லாபம் மட்டும் கஜானாவுக்கு வந்து சேர்வதாக தெரியவில்லை. அதாவது எடுக்கப்பட்ட வைரங்களின் எண்ணிக்கை சரியாக உள்ளது. அதில் கிடைக்க வேண்டிய லாபம், ஜனாதிபதியின் சொந்த அக்கவுண்டுக்கு போய்ச் சேர்கிறது!
கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட அரசு பட்ஜெட் அறிக்கையில் மாத்திரம், வைரங்களால் வரவேண்டிய லாபத்தில் 60 மில்லியன் டாலர் தொகைக்கு பதிவுகள் ஏதுமில்லை. நிதியமைச்சரால் அதிகாரபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கை அது! (நிதியமைச்சர் இப்போது முகாபே எதிரணியில் உள்ளார்)
இது தொடர்பாக விஷயமறிந்த வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஜனாதிபதியால் கடந்த வருடம் வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பணத்துடன் ஒப்பிட்டால், 60 மில்லியன் டாலர் மிகக் குறைவான தொகையே என்கிறார்கள். ஜனாதிபதி முகாபே தமது செல்வத்தை வெளிநாடுகளில் எங்கெல்லாம் வைத்திருக்கின்றார் என்பது குறித்து, மேற்கு நாடுகள் கவனமாக அவதானித்து வருகின்றன என்பதையே வெளிநாட்டு ராஜதந்திரிகளின் கூற்று காட்டுகிறது.
வைரங்களில் கிடைக்கும் அதீத பணத்தின் ஒரு பகுதியை முகாபே அரசியல் செய்வதற்கும் பயன்படுத்துகிறார் (நம்ம பாஷையில், கட்சி நிதி) என்கிறார் மைக் டேவிஸ். இவர் கிழக்கு ஜிம்பாப்வேயில் கிடைக்கும் வைரங்கள் தொடர்பான பொருளாதார ஆராய்ச்சி செய்யும் மரேஞ்ச் ஃபீல்டு என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்.
“வைரங்களின் மூலம் கிடைக்கும் பணம் எக்கச்சக்கமாக இருப்பதால், ஜனாதிபதியைச் சுற்றி இருப்பவர்களும் அதில் சிறிய பகுதியை அடித்துச் செல்வதை ஜனாதிபதி கண்டுகொள்வதில்லை. அதேபோல மற்றொரு பகுதி பணத்தை கட்சிக்காக தாராளமாகக் கொடுத்து விடுகிறார் அவர்”
ஜிம்பாப்வேயின் வைரங்கள் வெளியே விற்கப்படலாம் என்று சமீபத்தில் தந்திரமாக வெளியான அறவிப்பு தொடர்பாக மேலைநாடுகள் எவையும் வாய் திறக்கவில்லை. அதற்கு ‘வேறு’ ஒரு காரணம் இருக்கலாம்.
ஒருவேளை நாளைக்கே முகாபேக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், வைரங்கள் ஜிம்பாப்வேயில் தங்கிவிடுவதைவிட, வெளியே விற்கப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளில் பணமாக இருந்தால் நல்லதல்லவா? (புரிகிறதா? புரியாவிட்டால் மீண்டும் ஒருமுறை கடைசி வாக்கியத்தை படிக்கவும்).
0 comments :
Post a Comment