Monday, December 5, 2011

புவியின் கீழ்வெப்பத்தை கொண்டு மின் - உற்பத்திக்கான முயற்சியில் எமது விஞ்ஞானிகள்

புவியின் கீழான வெப்பத்தை இலங்கையில் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புவியின் கீழான வெப்பத்திற்கு அமைய, நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வென்னீர் ஊற்றுகளை அடுத்துள்ள பகுதிகளில் இது தொடர்பாக இலங்கை விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல நாடுகள் இத்தகைய வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. அவற்றுள் கென்யா முக்கிய இடம் வகிக்கின்றது. அந்நாட்டின் மொத்த மின்தேவையில் 13 சதவீதம் இத்தகைய மின் உற்பத்தி மூலமே பெறப்படுகின்றது. இதன் மூலமான முதலீட்டில் பாரிய வருமானம் கிடைப்பதாக அந்நாட்டு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 2014ம் ஆண்டளவில், அந்நாட்டில் பூமியின் கீழான வெப்ப மின்னுற்பத்தி மூலம் மொத்த கோரிக்கையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமென்று கென்யா எதிர்பார்த்துள்ளது.

மழைநீரை பூமி உறிஞ்சும் போது ஏற்படும் வெப்பநிலை இத்தகைய மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய இடங்கள் வெப்ப நீரூற்றுகளாக கருதப்படுகிறது.

இலங்கையில் கூடுதலான வெப்பத்தைக் கொண்ட வெப்ப நீரூற்றுகள் மஹஓயா பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடுதலான வெப்பத்துடனான நீர் ஊற்றுக்களின் வெப்பநிலை 55 பாகை செல்சியஸ் ஆகும். இத்தகைய இடங்களில் 6 கிணறுகள் உண்டு. இலங்கையில் ஒன்பது இடங்களில் இவ்வாறான கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
வெப்ப நீரூற்றுகளை அடுத்துள்ள பகுதிகளில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மனிதாபிமான நடவடிக்கை முடிவுற்ற பின்னர், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த மஹஓயாவில் உள்ள நன்னீர்க் கிணறுகளைக் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மஹஓயா பிரதேச சபைத் தலைவர் கே.பி.ஹெற்றிஆராச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment