போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன அதிபர் உத்தரவு
போருக்கு தயாராகுமாறு சீன கடற்படைக்கு அந்நாட்டு அதிபர் ஹூ ஜிண்டாவோ உத்தரவிட்டுள்ளார். தெற்கு சீன கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு வளம் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதியையொட்டிய கடல் பகுதிகளை சீனாவையொட்டியுள்ள பல்வேறு அண்டை நாடுகள், குறிப்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்றவை சொந்தம் கொண்டாடி வருகின்றன.
இங்கு எண்ணெய் துறப்பன பணிகளுக்காக சில நாடுகளுடன் இந்த நாடுகள் ஒப்பந்தமும் செய்துள்ள நிலையில், இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இது விடயத்தில் சீனாவையொட்டியுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளதோடு, அதிபர் பராக் ஒபாமா உள்பட பல்வேறு அமெரிக்க உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் தங்களது கடல் பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது.
இந்த சூழ்நிலையிலேயே, போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு அழைப்பு விடுத்துள்ளார் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ.
இது தொடர்பாக சீனாவின் அதிகாரமிக்க மத்திய இராணுவ ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.
கடற்படை தனது மாற்றம் மற்றும் நவீனமயமாக்கலை தீர்க்கமான முறையில் முடுக்கிவிட்டு, தேசத்தை பாதுகாக்கும் ஒரு போருக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
தேச பாதுகாப்பு மற்றும் இராணுவ கட்டமைப்பு ஆகியவற்றை சுற்றியே நமது பணிகள் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment