Thursday, December 8, 2011

ஈபிடிபி யினுள் உட்கட்சி மோதல் உகிரம்! முக்கியஸ்தர் ஒருவர் நீக்கம்!

யாழ் மாநகர மேயரின் வீடு தற்போது பளிங்கு மாளிகையாக மாறியுள்ளது!

15000 ரூபா சம்பளம் பெறும் இவருக்கு எங்கிருந்து இப்பணம்வந்தது ?

கேட்கின்றார் நீக்கப்பட்ட மாநகர சபை உறுப்பினர்.


ஈபிடிபி கட்சியினுள் நிலவி வந்த நீண்ட நாள் உள்வீட்டு பிணக்கு தற்போது வீதிக்கு வந்துள்ளது. கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமான மனுவல் மக்களநேசன் என்பவர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான முறையிலும் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டமையினால் அவரை ஈபிடிபி கட்சி பணிகளில் இருந்து தற்காலிகமாக நிறுத்துவதாக, நேற்று ஈபிடிபி யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமல் எனப்படுகின்ற கமலேந்திரன் தலைமையில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் ஈபிடிபி யினர் மீது புலிகள் கற்பழிப்பு , கொலை , கொள்ளை போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர். இக்குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் நேற்று கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்கூறிய ஈபிடிபி அமைப்பாளர் கமல், மனுவல் மங்களநேசன் என்பவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதில் அவர் பெண்கள் விடயத்தில் பலகில்லாடி எனவும் யாழ் மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகசத்தரிடம் தவறாக நடக்க முற்பட்டதாலும் அதேவேளை மதுவுக்கு அடிமையான ஒருவர் என்பதினாலும் இவரை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாகவும், மங்களநேசனின் தவறான நடவடிக்கைக்காக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளமைப்பிலிருந்து கருணா வெளியேறியபோது புலிகள் கருணா மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்களோ அதே பாணியில் ஈபிடிபியும் தமது சகாமீது குற்றசாட்டுக்களை அடுக்கியுள்ளது.

இதேவேளை தான் அமைச்சர் டக்ளஸ், யாழ்.மாநகர மேயரின் ஊழல்களை வெளியிடுவேன் என அறிவித்தமையினாலேயே தன்மீது இவ்வாறான பொய்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும் மங்களநேசன் ஈபிடிபி இல்லாவிட்டால் ஜக்கிய மக்கள் சுகந்திரக் கட்சியில் இணைவேன் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு டக்ளஸ் மற்றும் மேயரின் பல கோடி ஊழல்களை எதிர்வரும் காலங்களில் ஆதாரங்களுடன் வெளியிடவுள்ளதாகவும் மங்கள நேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ் மாநகரசபை முதல்வர் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை அடுக்கும் மங்களநேசன், மாநகர சபைக்குச் சொந்தமான யாழ்ப்பாண மரக்கறிச் சந்தையில் உள்ள 20 கடைகள் சட்டத்திற்கு முரணான வகையில் வழங்கப்பட்டிருப்பதுடன், ஒவ்வெரு கடைக்கும் தலா 15 இலட்சம் ரூபாய் வீதம் மாநகர சபை மேயரால் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாதாந்தம் 15 ஆயிரம் ஊதியம் பெறும் மேயர், தற்போது அவரின் வீட்டை பளிங்கு மாளிகையாக மாற்றியுள்ளார் எனில் இதற்கான வருமானம் ஏது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மிகவும் நல்லவர் எனவும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எந்த விதத்திலும் பள்ளிக்கூடம் போகாதவர்கள் எனவும் அழுக்குப் படிந்தவர்கள் எனவும் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் மங்களநேசன்.

இவ்வாறான நிலையில் தனது பிரச்சினைகளை தான் அமைச்சருக்கு எடுத்தியம்ப முனைந்தபோதெல்லாம் இடையில் நிற்கும் நாய்கள் குரைப்பதாகவும், கடிக்க வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் இதன் பிரகாரம் தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவேன் அன்றில் தனிக்கட்சி ஒன்று ஆரம்பிப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனிக்கட்சி ஆரம்பிப்பதாயின் தன்னுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உண்டெனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com