முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேக்காவிற்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய 30 மாதகால சிறைத்தண்டனையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஏகமனதாக தள்ளுபடி செய்யப்பட்டது.
இராணுவ நீதிமன்றத்தின் நீதவான்களாக செயற்பட்ட மேஜர்ஜெனரல்கள் மூவரும் அரச தரப்பு சட்டத்தரணியும், இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளின் போது நடந்துகொண்ட விதம் குறித்தே மனுதாரரான சரத் பொன்சேக்கா தனது மேன்முறையீட்டு மனுவில் அதிகளவில் குறிப்பிட்டுள்ளமையே மனு தள்ளுபடி செய்யப்பட்டமைக்குக் காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது.
இரண்டாம் இராணுவ நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்யக் கோரி சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த மனுவை எரிக் பஸ்நாயக்க, ஏ.டபிள்யு.ஏ.சலாம் மற்றும் உபாலி அபேரட்ன ஆகிய நீதிபதிகள் விசாரித்தனர்.
இரண்டாம் இராணுவ நீதிமன்ற நீதிபதி பக்கச்சார்பானவர் என சரத் பொன்சேகா தனது மனுவில் பிரதானமாகக் கூறியிருந்ததாக தீர்ப்பை அறிவித்து கருத்து தெரிவித்த நீதிபதி எரிக் பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மனு விசாரணையின் போது மேற்கூறிய பிரதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் வலியுறுத்த மனுதாரர் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தனது நிலைப்பாட்டை வெளியிடுவதற்கு போதுமாளவு விடயங்களை மனுதாரர் முன்வைக்கவில்லை எனவும் இன்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் மனுதாரரின் கோரிக்கைகளுக்கு சலுகை வழங்க முடியாதென மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று அறிவித்தது.
No comments:
Post a Comment